இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரு தரப்பு தொடர் விவகாரம்: பாகிஸ்தானுடன் விளையாடும்படி இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது

லாகூர்: 2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன், முழுமையான இரு தரப்பு தொடரில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. இருந்தபோதும் இரு தரப்பு தொடர்களில் விளையாடுவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இடையே, 2014ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்பின் காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்தியா விரும்பவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நடத்தும் போட்டிகளில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.



முன்னதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ மதிக்கவில்லை எனக்கூறி, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பிசிபி வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வந்திருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், ‘’இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு தொடரில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடும்படி, எங்களால் இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது. இரு தரப்பு கிரிக்கெட் தொடர் என்பது, இரு நாட்டு வாரியங்களுக்கு இடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.



பொதுவான இடங்களில் விளையாடலாம், இழப்பீடு வழங்க வேண்டும் என பிசிபி கூறி வருவதை பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இந்த விவகாரத்தில் நாங்கள் நடுநிலையுடன்தான் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.

2015-2023ம் ஆண்டு வரை, 6 இரு தரப்பு தொடர்களில் விளையாடுவது என, பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 2014ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது.

இதன்படி மொத்தம் 14 டெஸ்ட், 30 ஒரு நாள், 12 டி20 போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாட இருந்தன. இதில், 4 தொடர்களை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.


.

மூலக்கதை