ஐநா தடைக்கு பிறகும் ஜப்பான் மீது சீறி பாய்ந்த வடகொரிய ஏவுகணை: பொது மக்கள் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐநா தடைக்கு பிறகும் ஜப்பான் மீது சீறி பாய்ந்த வடகொரிய ஏவுகணை: பொது மக்கள் அதிர்ச்சி

சியோல்,: வடகொரியா மீது ஐநா பொருளாதார தடை விதித்த பிறகும் ஜப்பானை கடந்து வட கொரிய ஏவுகணை சீறி பாய்ந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலக தலைவர்கள் வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வட கொரியா தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும் வகையில் கொரிய தீபகற்ப பிராந்தியத்தில் தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பலை நிறுத்தியது.   வடகொரியாவுக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு அளித்து வந்த நிலையில், ஐநாவில் வடகொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடை தீர்மானத்திற்கு அவை திடீரென ஆதரவு அளித்தன.

 அதே வேளையில் ஐநாவில் இதுவரை 8 முறை வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இது எதையும் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

சுமார் 3700 கிமீ தூரம் கண்டம் விட்டு கண்டம் சீறிப்பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. அதன் தலைநகர் பியோங்யோங்கில் இருந்து சீறிப்பாய்ந்த ஏவுகணை சுமார் 770 கிமீ உயரத்தில் தென் கொரியா, ஜப்பான் வழியாக ஹெக்கைடோ என்ற இடத்தை கடந்து பசிபிக் கடலில் சென்று விழுந்தது.

இதை கண்டு ஜப்பான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டது.



வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறுகையில், வட கொரிய ஏவுகணை ஜப்பானை கடந்து சென்றுள்ளது.

இது மிகவும் அதிகபிரசங்கித்தனமானது. வடகொரியா தொடர்ந்து இதே பாதையில் சென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வடகொரியா நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றார்.
ஆனால் ஜப்பான் அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் கைப்பாவை என வடகொரியா இதை கிண்டல் அடித்துள்ளது.

ஐநாவின் பொருளாதார தடைக்கு பிறகும் ஜப்பானை கடந்து செல்லும் வகையிலான நீண்ட தூர ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை