கடைசி 2 ஓவர்களை சந்தீப், மொகித் சிறப்பாக வீசி வெற்றி தேடி தந்தனர் : பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடைசி 2 ஓவர்களை சந்தீப், மொகித் சிறப்பாக வீசி வெற்றி தேடி தந்தனர் : பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கருத்து

மும்பை: ஐபிஎல் தொடரில், மும்பையில் நேற்று இரவு நடந்த 51வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

சாஹா ஆட்டமிழக்காமல் 93 (55 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), மேக்ஸ்வெல் 47 (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), குப்தீல் 36 ரன்கள் (18 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பும்ரா, மெக்கிளனகன், கரண் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இமாலய இலக்கை விரட்டிய மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன் எடுத்து, 7 ரன் வித்யாசத்தில் தோல்வியடைந்தது. சிம்மன்ஸ்-பார்த்தீவ் பட்டேல் முதல் விக்கெட்டிற்கு 8. 4 ஓவர்களில் 99 ரன்கள் குவித்தனர்.

சிம்மன்ஸ் 59 (32 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 38 ரன்களில் (23 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.

இதன்பின் ஹர்திக் பாண்டியா 30 (13 பந்து, 4 சிக்சர்), கரண் சர்மா 19 (6 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) அதிரடியாக ரன் குவித்ததால் மும்பை வெற்றியை நெருங்கியது.

சந்தீப் சர்மா, மொகித் சர்மா வீசிய கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை 15 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசி வரை போராடிய பொல்லார்டு 50 (24 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்பஜன் சிங் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை வென்றிருந்தால், ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ‘சேஸிங்காக’ இருந்திருக்கும். மொகித் சர்மா 2, சந்தீப் சர்மா, அக்‌ஷர் பட்டேல், மேக்ஸ்வெல், திவேதியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இரு அணிகளுக்கும் இது 13வது போட்டியாகும். பஞ்சாப் 7வது வெற்றியையும், மும்பை 4வது தோல்வியையும் சந்தித்தன.

மும்பை ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. மும்பைக்கு எதிரான வெற்றியின் மூலம் பஞ்சாப்பும் ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கிறது.

சாஹா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கூறுகையில், ‘நாங்கள் 2 கேட்சுகளையும், ரன் அவுட் வாய்ப்புகளையும் தவற விட்டோம்.

எனினும் கடைசி 2 ஓவர்களை மிகவும் தரமாக வீசி சந்தீப் சர்மா, மொகித் சர்மா வெற்றி தேடி தந்து விட்டனர். பொல்லார்டு களத்தில் இருக்க, அழுத்தமான சூழ்நிலையில், பந்து வீசுவது மிகவும் கடினமானது.

அத்துடன் பனி காரணமாக பந்து வழுக்கி வேறு சென்றது. இருந்தபோதும் சிறப்பாக பந்து வீசிய அவர்களுக்கு பாராட்டுக்கள்.

பேட்டிங் ஆர்டரில் எந்த வரிசையில் மாற்றி மாற்றி களமிறக்கினாலும் சாஹா சிறப்பாக விளையாடுகிறார்’ என்றார்.

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘தோல்வி ஏமாற்றமளிக்கிறது.

எனினும் நாங்கள் கடுமையாக சவால் அளித்தோம். இந்த உழைப்புக்காக மும்பை வீரர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

தோல்விக்காக பந்து வீச்சாளர்களை குறை கூற விரும்பவில்லை. பொல்லார்டு-ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்தபோது பேட்டிங்கில் சமநிலை இருந்தது.

ஆனால் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த நிலையில் (16. 1வது ஓவரில் ஸ்கோர் 176ஆக இருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார்) ஒரு பேட்ஸ்மேன் பெரிய ஷாட்களை ஆடுவது கடினமானது. இது போன்ற ‘பிட்சுகளில்’ எப்படி செயல்பட வேண்டும் என நிறைய விஷயங்களை கற்று கொண்டுள்ளோம்’ என்றார்.


.

மூலக்கதை