இரு தரப்பு தொடருக்கு முறையாக ஒப்பந்தம் செய்யவில்லை : பாகிஸ்தானுக்கு இழப்பீடு எதுவும் வழங்க முடியாது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரு தரப்பு தொடருக்கு முறையாக ஒப்பந்தம் செய்யவில்லை : பாகிஸ்தானுக்கு இழப்பீடு எதுவும் வழங்க முடியாது

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக, கடந்த 2008ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானுடன் ஒரு முழுமையான இரு தரப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவில்லை. கடந்த 2012ம் ஆண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் 3 ஒரு நாள், 2 டி20 போட்டிகள் என நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் மட்டுமே விளையாடியது.

இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அப்போதைய பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) செயலாளரான சஞ்சய் பட்டேல், 2015-2022 இடையிலான கால கட்டத்தில், பாகிஸ்தானுடன் 12 டெஸ்ட், 30 ஒரு நாள், 12 டி20 போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) கடிதம் எழுதினார்.

ஆனால் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக இந்த போட்டிகளில் ஒன்று கூட நடைபெறவில்லை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தொடர்களில் மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. ஒப்புக்கொண்டபடி இரு தரப்பு தொடரில் விளையாடாததால், இழப்பீடு வழங்கும்படி, பிசிசிஐ-க்கு பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் எந்தவிதமான இழப்பீடும் வழங்க முடியாது என பிசிசிஐ அதிரடியாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பிசிபி-க்கு நேற்று மாலை பிசிசிஐ அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இரு தரப்பு தொடர் தொடர்பாக, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான தற்காலிக புரிதலை, முறையான ஒப்பந்தம் என பிசிபி தவறாக புரிந்து கொண்டுள்ளது.

பாகிஸ்தானுடன் இரு தரப்பு தொடர் என்பது அரசின் அனுமதியை பொறுத்தது. எங்கள் கட்டுப்பாட்டில் எதுவும் இல்ைல.

எனவே நீங்கள் (பிசிபி) வலியுறுத்தும் இழப்பீட்டை வழங்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐ-க்கு இல்லை. 2014ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதியிட்ட கடிதம் தற்காலிக புரிதல் மட்டுமே.

அது முறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை