தேவையான ரன் விகிதம் அதிகரித்ததே தோல்விக்கு மிக முக்கிய காரணம் : கம்பீர் புலம்பல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேவையான ரன் விகிதம் அதிகரித்ததே தோல்விக்கு மிக முக்கிய காரணம் : கம்பீர் புலம்பல்

சண்டிகர்: ஐபிஎல் டி20 தொடரில், சண்டிகரில் நேற்று இரவு நடந்த 49வது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

மேக்ஸ்வெல் 44 ரன்கள் (25 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். குல்தீப் யாதவ், கிறிஸ் வோக்ஸ் தலா 2, உமேஷ் யாதவ், சுனில் நரைன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டும் எடுத்து, 14 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியடைந்தது. கிறிஸ் லின் 84 ரன்கள் (52 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை.

மொகித் சர்மா, ராகுல் திவேதியா தலா 2, மேட் ஹென்ரி ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

12வது போட்டியில் 6வது வெற்றியை பெற்ற பஞ்சாப் ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கிறது.

எஞ்சியுள்ள 2 போட்டிகளில் கட்டாயம் வெல்வதுடன், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் விளையாடும் இதர போட்டிகளின் முடிவை பொறுத்தே பஞ்சாப்பின் ‘பிளே ஆப்’ வாய்ப்பு அமையும். 13வது போட்டியில் விளையாடிய கொல்கத்தா 5வது தோல்வியை சந்தித்தது.

மொகித் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார். வெற்றி குறித்து பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கூறுகையில், ‘மேம்பட்ட செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்தும்படி வீரர்களிடம் கூறினேன்.

நிச்சயமாக வீரர்கள் அதன்படி நடந்து கொண்டனர். 10-15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தபோதும், எங்கள் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

ராகுல் திவேதியா (4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட்) நன்றாக பந்து வீசினார். அவர் வீசிய முதல் பந்து சுழன்றதை பார்த்தபோது, சுழற்பந்து வீச்சாளர்களை அதிக ஓவர் வீச வைக்க வேண்டும் என எண்ணினேன்’ என்றார்.
 
கொல்கத்தா கேப்டன் கம்பீர் கூறுகையில், ‘இன்னிங்சை நன்றாகதான் தொடங்கினோம்.

ஆனால் நானும் (8), ராபின் உத்தப்பாவும் (0) ஆட்டமிழந்தது திருப்பு முனை. பஞ்சாப் அணிக்கு பாராட்டுக்கள்.

எங்களுக்கு அவர்கள் எளிதான ரன்களை விட்டு கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 7. 5-8 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் அதை நாங்கள் ஒரு ஓவருக்கு 10-11 ரன்கள் வரை எடுத்து சென்றதே தோல்விக்கு முக்கிய காரணம். நானும், கிறிஸ் லின்னும் இன்னிங்சை தொடங்க வேண்டும், ராபின் உத்தப்பா 3வது வீரராக களமிறங்க வேண்டும் என கூறுகின்றனர்.

ஆனால் சுனில் நரைன் அதிரடியாக தான் விளையாடுகிறார். எனினும் வரும் போட்டிகளில் அதை பற்றி சிந்திப்போம்’ என்றார்.


.

மூலக்கதை