‘சேஸ்’ செய்ய சிறிய ‘டோட்டலை’ கொடுத்த பவுலர்களுக்கு பாராட்டுக்கள் : டேவிட் வார்னர் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘சேஸ்’ செய்ய சிறிய ‘டோட்டலை’ கொடுத்த பவுலர்களுக்கு பாராட்டுக்கள் : டேவிட் வார்னர் மகிழ்ச்சி

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில், ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த 48வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரோகித் சர்மா 67 ரன்கள் (45 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சித்தார்த் கவுல் 3, புவனேஸ்வர் குமார் 2, ரஷித்கான், முகமது நபி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 18. 2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 140 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகார் தவான் ஆட்டமிழக்காமல் 62 (46 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹென்ரிக்ஸ் 44 ரன்கள் (35 பந்து, 6 பவுண்டரி) எடுத்தனர்.



மலிங்கா, பும்ரா, மெக்கிளனகன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஷிகார் தவான் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

13வது போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 7வது வெற்றியை பெற்று ‘பிளே ஆப்’ வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டது. 12வது போட்டியில் விளையாடிய மும்பை 3வது தோல்வியை சந்தித்தது.

‘பிளே ஆப்’ சுற்றுக்கு மும்பை ஏற்கனவே தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘எங்கள் அணி பவுலர்களுக்கு பாராட்டுக்கள்.

‘சேஸ்’ செய்ய சிறிய ‘டோட்டலை’ அவர்கள்தான் கொடுத்தார்கள்.

தவான், ஹென்ரிக்சின் பேட்டிங்கும் பாராட்டுக்குரியது.

டாப்-4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் இறுதி வரை நிலைத்து நின்று விளையாட வேண்டும் என கூறியிருந்தேன். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது.

சிம்மன்ஸ் (1 ரன்) விக்கெட்டை விரைவாக வீழ்த்தியது முக்கியமானது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் (வரும் 13ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் லயன்சுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பலப்பரீட்சை நடத்துகிறது).



கடந்த சீசனில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்று கோப்பையை வென்றோம். தற்போது ஒவ்வொரு போட்டியையும் ‘நாக் அவுட்டாக’ கருதி விளையாடி வருகிறோம்’ என்றார்.

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘பேட்டிங்கில் தடுமாறியதே தோல்விக்கு காரணம். போதுமான இலக்கை நிர்ணயிக்கவில்லை.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மிக சிறப்பாக பந்து வீசியது. ஷிகார் தவான் பேட்டிங்கும் அபாரமாக இருந்தது.   2வது பேட்டிங் செய்வது எளிதானது.

அந்த நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டால், மிகவும் கடினமாக அமைந்து விடும். இந்த தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பாடம்’ என்றார்.


.

மூலக்கதை