பவுலர்கள், பீல்டர்கள் கை விட்டு விட்டனர் : பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பவுலர்கள், பீல்டர்கள் கை விட்டு விட்டனர் : பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் வேதனை

மொகாலி: மொகாலியில் நேற்று இரவு நடந்த, ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.

ஹசீம் அம்லா 104 ரன்கள் (60 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். பாசில் தம்பி, குல்கர்னி, சங்வான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த குஜராத் 19. 4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்யாசத்தில் வென்றது. டிவைன் ஸ்மித் 74 (39 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 39 (25 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்தி ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

சந்தீப் சர்மா 2, மேக்ஸ்வெல், நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

12வது போட்டியில் விளையாடிய குஜராத் 4வது வெற்றியை பதிவு செய்தது.

ஆனால் குஜராத் ஏற்கனவே ‘பிளே ஆப்’ வாய்ப்பை இழந்து விட்டது. 11வது போட்டியில் விளையாடி 6வது தோல்வியை சந்தித்ததால், பஞ்சாப்பின் ‘பிளே ஆப்’ வாய்ப்பு மங்கியது.

இதனால் எஞ்சிய 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் பஞ்சாப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் தனது 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வி அடைந்தால் மட்டுமே பஞ்சாப் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.



வெற்றி குறித்து குஜராத் கேப்டன் ரெய்னா கூறுகையில், ‘190 போன்ற பெரிய இலக்கை ‘சேஸ்’ செய்யும்போது, நல்ல தொடக்கம் கிடைப்பது அவசியம். டிவைன் ஸ்மித்-இஷான் கிஷன் அதனை சரியாக செய்தனர் (முதல் விக்கெட்டிற்கு 9. 2 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்தனர்).

அதன்பின் நானும், தினேஷ் கார்த்திக்கும் நன்றாக ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து விளையாடினோம். அந்த சமயத்தில் சந்தீப் சர்மா, மொகித் சர்மா அபாரமாக பந்து வீசினர்.

ஆனால் நானும், தினேஷ் கார்த்திக்கும் அதை சமாளித்து ‘பேட்’ செய்தோம்’ என்றார்.

பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கூறுகையில், ‘189 என்பது போதுமான ஸ்கோர்தான்.

ஆனால் பவுலர்கள், பீல்டர்கள் கை விட்டு விட்டனர். 3 முக்கியமான கேட்சுகளை தவற விட்டோம் (டிவைன் ஸ்மித் 42, 51, ரெய்னா 36 ரன்களில் இருந்தபோது கேட்சுகளை தவற விட்டனர்).


துரதிருஷ்டவசமாக அடுத்து வரும் போட்டிகளில் ஹசீம் அம்லா, டேவிட் மில்லர் விளையாட மாட்டனர்’ என்றார்.

ராசியில்லாத சதங்கள்

நடப்பு சீசனில் ஹசீம் அம்லா விளாசிய 2வது சதம் இது.

முன்னதாக கடந்த மாதம் 20ம் தேதி நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் விளாசினார். அந்த போட்டியில் பஞ்சாப் 198 ரன்கள் குவித்திருந்தபோதும் மோசமான பந்து வீச்சால் தோல்வியை தழுவியது.

தற்போது ஹசீம் அம்லா 2வது சதம் விளாசிய போட்டியிலும் பஞ்சாப் தோல்வியை சந்தித்துள்ளது.

.

மூலக்கதை