கிறிஸ் லின், நரைனுக்கு குவியும் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிறிஸ் லின், நரைனுக்கு குவியும் பாராட்டு

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்று மாலை நடந்த 46வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்யாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது. 15. 1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் இலக்கை ‘சேஸ்’ செய்து கொல்கத்தா வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்கள் கிறிஸ் லின்-சுனில் நரைன் 6 ஓவர்களில் 105 ரன்கள் குவித்து மிரட்டினர். சுனில் நரைன் 54 (17 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் லின் 50 ரன்கள் (22 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

இதில், சுனில் நரைன் வெறும் 15 பந்துகளில் அரை சதம் கடந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதம் விளாசிய வீரர் என்ற கொல்கத்தா வீரர் யூசுப் பதானின் சாதனையை சமன் செய்தார்.

யூசுப் பதானும் கடந்த 2014ம் ஆண்டு 15 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்ட பெங்களூரு 10வது தோல்வியை சந்தித்து ஏமாற்றமளித்தது.

போட்டி குறித்து பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டர் டிராவிஸ் ஹெட் கூறுகையில், ‘கிறிஸ் லின் நம்ப முடியாத வகையில் பந்தை அடித்து விளையாட கூடியவர். பிக் பாஸ் தொடரிலேயே அவர் இதை செய்துள்ளார்.



158 ரன்கள் எடுத்து, சவாலான இலக்கை நிர்ணயித்தபோதும் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார். கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா கூறுகையில், ‘கிறிஸ் லின் போல் பந்தை கடுமையான அடிப்பவர்களை நான் பார்த்தில்லை.

கிறிஸ் லின்-சுனில் நரைன் ஜோடி பெங்களூருவிடம் இருந்து வெற்றியை பறித்து சென்று விட்டது’ என்றார். சிறப்பாக விளையாடிய கிறிஸ் லின்-சுனில் நரைனுக்கு கொல்கத்தா அணியும் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கானும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை