பிரான்ஸ் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரான் வெற்றி : உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரான்ஸ் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரான் வெற்றி : உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே பதவிக்காலம் முடிவதால் அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்காயில் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவேல் மக்ரான் மற்றும் இடது சாரி சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது.

இதில் குறைந்த வாக்குகள் பெற்ற பிரான்காயில் பில்லன் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டார்.   முதல்கட்ட வாக்குப்பதிவில் 23. 7 சதவீதம் வாக்குகளை பெற்ற வலதுசாரி தலைவரும், பெண் வேட்பாளருமான மரின் லீ பென் மற்றும்  21. 7 சதவீதம் வாக்கு பெற்ற இமானுவேல் மக்ரான் ஆகியோர்  இரண்டாவது கட்ட தேர்தலில் போட்டியிட்டனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.



புதுச்சேரியில் பிரான்ஸ் துணை தூதரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சுமார் 4,600 பேர்  வசித்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்காக, அங்குள்ள தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 6 வாக்குசாவடியில் இவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

காரைக்கால், சென்னையிலும் ஏராளமான பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களித்தனர். 65. 1% வாக்குகள் பெற்று இமானுவேல் மேக்ரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் பிரான்ஸ்  நாட்டின் 24வது அதிபராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 39 வயதான இவர் பிரான்ஸ் நாட்டின் இளம் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.



வெற்றி பெற்ற மேக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். ‘இங்கிலாந்தின் நீண்டகால நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று.

புதிய அதிபருடன் பல்வேறு விவகாரங்களில் இணைந்து பணியாற்றும் எதிர்பார்ப்பில்  உள்ளோம்’ என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் சர்வதேச நலனுக்காக நாம் இணைந்து செயல்படுவோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

.

மூலக்கதை