ஒரே ரன்வேயில் வந்ததால் விபரீதம் : டெல்லி ஏர்போர்ட்டில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று உரசல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரே ரன்வேயில் வந்ததால் விபரீதம் : டெல்லி ஏர்போர்ட்டில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று உரசல்

புதுடெல்லி: டெல்லி ஏர்போர்ட்டில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லி ஏர்போர்ட்டில் நேற்று பிற்பகல் 2. 48 மணி அளவில் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்தது.

இது ரன்வேயில் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 115 பயணிகள், 8 ஊழியர்கள் இருந்தனர்.

அப்போது ஸ்ரீநகர் செல்லும் மற்றொரு விமானம் 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் அதே ஓடுபாதைக்கு வந்தது. இரண்டும் ஒரே ரன்வேயில் அருகருகே சென்ற போது எதிர்பாராத விதமாக விமானத்தின் இறக்கைகள் ஒன்றுடன் உரசிக் கொண்டன.

இதனால் இரு விமானங்களும் லேசாக குலுங்கின.

இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அலறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் நல்வாய்ப்பாக இந்த சிறிய விபத்தில் பயணிகள் அனைவரும் சிறிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர். இதையடுத்து இரண்டு விமானங்களிலும் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் மாற்று விமானங்களின் மூலம் தங்களது ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விமானங்கள் உரசியதால் விமானத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதாக என நிபுணர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் டெல்லி ஏர்போர்ட்டில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே ரன்வேயில் இரண்டு விமானங்களை அனுமதித்தது எப்படி என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதனால் விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என பயணிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை