பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா!

PARIS TAMIL  PARIS TAMIL
பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா!

 சுனில் நரைனின் அதிவேக அரை சதம், கிறிஸ் லின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

 
ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 75 ரன்கள் சேர்த்தார்.
 
பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினார்கள். கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இருவரும் நடத்திய வாணவேடிக்கையை பார்க்கும்போது ஹைலைட் போட்டியை பார்த்ததுபோல் இருந்தது.
 
கிறிஸ் லின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 2-வது ஓவரில் சுனில் நரைன் ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை சாஹல் வீசினார் அந்த ஓவரில் லின் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.
 
4-வது ஓவரை பத்ரி வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் ஹாட்ரிக் சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அரவிந்த வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். 5-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி அரைசதம் அடித்தார். வெறும் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதத்தை எட்டினார் சுனில் நரைன். அரைசதம் அடித்த அவர், கடைசி பந்தையும் பவுண்டரிக்கு தூக்கினார்.
 
அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் லைன் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பவர்பிளேயில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
 
7-வது ஓவரின் முதல் பந்தில் நரைன் அவுட் ஆனார். அவர் 17 பந்தில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் குவித்தார். அடுத்து டி கிராண்ட்ஹோம் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் லின் 21 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 22-வது பந்தில் ஆட்டம் இழந்தார்.
 
3-வது விக்கெட்டுக்கு கவுதம் காம்பீர் களம் இறங்கினார். கிராண்ட் ஹோம் 31 ரன்கள் எடுத்த நிலையிலும், காம்பீர் 14 ரன்கள் எடுத்த நிலையிலும் அவுட்டாக, யூசுப் பதான், மணீஷ் பாண்டே ஆகியோர் கொல்கத்தா அணி 15.1 ஓவரில் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால் கொல்கத்தா அணி 15.1 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை