ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எதிர்காலம் : சுரேஷ் ரெய்னா பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எதிர்காலம் : சுரேஷ் ரெய்னா பாராட்டு

டெல்லி: ஐபிஎல் டி20 தொடரில், டெல்லியில் நேற்று இரவு நடந்த 42வது லீக் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

சுரேஷ் ரெய்னா 77 (43 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 65 ரன்கள் (34 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். ரபாடா, பேட் கம்மின்ஸ் தலா 2, கோரி ஆண்டர்சன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த டெல்லி வெறும் 17. 3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 214 ரன் எடுத்து 7 விக்கெட் வித்யாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அதிரடியில் மிரட்டிய ரிஷப் பண்ட் 97 (43 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்), சஞ்சு சாம்சன் 61 ரன்கள் (31 பந்து, 7 சிக்சர்) எடுத்தனர்.



இடது-வலது கை ‘காம்பினேஷனான’ சஞ்சு சாம்சன்-ரிஷப் பண்ட் ஜோடி 2வது விக்கெட்டிற்கு 63 பந்துகளில் 143 ரன் குவித்து வியக்க வைத்தது. பாசில் தம்பி, ரவீந்திர ஜடேஜா, பிரதீப் சங்வான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

10வது போட்டியில் 4வது வெற்றியை பெற்ற டெல்லி ‘பிளே ஆப்’ வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. 11வது போட்டியில் 8வது தோல்வியை சந்தித்த குஜராத் தொடரில் இருந்து வெளியேறியது.

வெற்றி குறித்து டெல்லி கேப்டன் கருண் நாயர் கூறுகையில், ‘என் வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த பார்ட்னர்ஷிப்களில் (சஞ்சு சாம்சன்-ரிஷப் பண்ட்) இதுவும் ஒன்று.

இது போன்ற பெரிய இலக்கை ‘சேஸ்’ செய்யும்போது, எந்த திட்டத்தையும் வைத்து கொண்டு விளையாட முடியாது.

முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டியதுதான். சுதந்திரமாக விளையாடுவது, தோல்வி குறித்து கவலைப்படாமல் இருப்பது தொடர்பாக மட்டும் பேசினோம்’ என்றார்.

குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘இது ரிஷப் பண்ட்டிற்கான நாள். அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

208 ரன்கள் இலக்கு என்பது கட்டுப்படுத்த கூடியதே. அனைத்து வகையிலும் முயற்சி செய்தும் தோல்வியடைந்து விட்டோம்.

ஆனால் நாங்கள் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை என்பதே உண்மை. பழைய பந்தில் பவுலிங் செய்த அனுபவம் எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.

ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர்தான் இந்திய அணியின் எதிர்காலம்’ என்றார்.

 ‘டெல்லியை மையம் கொண்ட பண்ட் புயல்’

சச்சின்: ஐபிஎல் 10 சீசன்களிலும் நான் பார்த்த சிறந்த இன்னிங்சுகளில் ரிஷப் பண்டுடையதும் ஒன்று.
 
ரோகித் சர்மா: டெல்லியில் பண்ட் புயல்.

அச்சமில்லாத ஆட்டம். சதத்திற்கு தகுதியானவர் ரிஷப் பண்ட்.



‘மோசமான பந்துகளுக்கு தண்டனை கொடுத்தேன்’

ஆட்ட நாயகன் விருது வென்ற ரிஷப் பண்ட் கூறுகையில், ‘ஹிட் செய்வதற்கு ஏற்ற வகையில் வந்தால், சற்றும் யோசிக்காமல் பந்தை விளாசி விடுவேன். விக்கெட்டை இழப்பதை பற்றி யோசிக்க மாட்டேன்.

பந்து மோசமாக வந்தால், அதற்கான தண்டனையை கொடுத்து விட வேண்டும். அதைதான் நான் செய்தேன்.

3 ரன்களை பற்றி நான் யோசிக்கவில்லை (97 ரன்களில் ஆட்டமிழந்ததால் சதம் விளாசும் வாய்ப்பை இழந்தார்). என்னால் முடிந்த வரை இலக்கை வேகமாக எட்ட வேண்டும் என்றுதான் நினைத்தேன்’ என்றார்.


.

மூலக்கதை