சோமாலியாவில் தீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டு கொன்ற பாதுகாப்பு படையினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சோமாலியாவில் தீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டு கொன்ற பாதுகாப்பு படையினர்

மொகாதிசு: சோமாலியாவில் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பர்மாஜோ வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து இவரது புதிய அமைச்சரவை மார்ச் மாதம் பொறுப்பேற்றது.

இவரது புதிய ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக மிகவும் குறைந்த வயதுடைய அப்துல்லா ஷேக் (31) பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் நேற்று தலைநகர் மொகாதிசுவில் அதிபர் மாளிகை அருகே அப்துல்லா ஷேக் காரில் வந்து கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் அவரை சுட்டு கொன்றனர்.



சோமாலியாவில் நீண்ட காலமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் அரசு படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த சூழலில் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவு அமைப்பான அல் சபாப் இயக்கத்தினர் அங்கு ஆயுத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அதிபர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று அதிபர் மாளிகை நோக்கி அமைச்சர் அப்துல்லா ஷேக் காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சோதனை சாவடி அருகே வந்த போது, தீவிரவாதிகள் வந்த கார் என நினைத்து பாதுகாப்பு படையினர் காரின் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த சம்பவத்தில் அமைச்சர் அப்துல்லா ஷேக் பலியானார். தற்போது இந்த விவகாரம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.   சோமாலியாவில் அப்துல்லா ஷேக் இளைஞர்கள் இடையே மிகுந்த ஆதரவை பெற்றிருந்தார்.

அவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை