அரசு உதவி கிடைப்பதில் சிக்கல்; உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

தினமலர்  தினமலர்
அரசு உதவி கிடைப்பதில் சிக்கல்; உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

அரசிடம் கேட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உத்தரவு:


தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016, அக்டோபரில், இரண்டு கட்டங்களாக நடக்க இருந்தது. மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கில், '2017, மே மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உதவி:


மாநில தேர்தல் கமிஷன், 'ஜூலையில் தேர்தலை நடத்த தயார்' என, தேர்தல் கமிஷன் கூறியது. அதற்காக, அரசிடம் பல உதவிகளை கோரியுள்ளது. அதில், எஸ்.டி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பட்டியல் முக்கியம். அதை, அரசு இதுவரை, வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

குழப்பம்:


தற்போது, ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. இரண்டு அணிகளானதால், இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சின்னம் இன்றி, தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க.,வினர் தயங்குகின்றனர். தேர்தலை சந்திக்கும் மன நிலையில், முதல்வர் பழனிசாமி இல்லாததால், தேர்தல் கமிஷன் கேட்ட உதவிகளை வழங்காமல், அரசு தயக்கம் காட்டி வருகிறது.

சிக்கல்:


இரண்டு அணிகளையும் இணைக்கும் பேச்சு துவங்குவதிலும், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜூலை மாதத்திற்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் அமைதி காத்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை