அரசு மருத்துவமனை நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பரிதவிப்பு: மதுரையில் டாக்டர்கள் போராட்டத்தால் சிக்கல் நீடிப்பு

தினமலர்  தினமலர்
அரசு மருத்துவமனை நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பரிதவிப்பு: மதுரையில் டாக்டர்கள் போராட்டத்தால் சிக்கல் நீடிப்பு

மதுரை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்ய ஆளின்றி ஆபத்தான நிலையில் உள்ளனர்.'இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் படி, தொலைதுார கிராமங்களில் பணி செய்யும் அரசு டாக்டர்கள் பட்டமேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது. தமிழகத்துக்கு ஒதுக்கப்படும், பட்டமேற்படிப்பு இடங்களில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம், விடுப்பு எடுக்கும் போராட்டம், சாலை மறியல் போன்ற வடிவங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் இல்லாததால், ஒவ்வொரு நொடியையும் ஆபத்தான நிலையில்கடந்து வருகின்றனர்.ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்ட நோயாளிகள் இம்மருத்துவமனையை நம்பி உள்ளனர். தினமும் 2,500 வெளி நோயாளிகளும், 8,000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.இங்கு பல்வேறு மருத்துவ பிரிவுகளுக்கான, 17 அறுவை சிகிச்சை அரங்குகளில் 52 படுக்கைகள் உள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனையாக இது திகழ்கிறது. ஆண்டுக்கு, 25 ஆயிரம் 'மேஜர்' அறுவை சிகிச்சைகளும், 42 ஆயிரம் 'மைனர்' அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன.
ஆனால், தற்போதைய போராட்டம் காரணமாக பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு வருவதில்லை. இதனால், இருதயவியல், புற்றுநோயியல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், சிறுநீரகவியல் போன்ற முக்கிய துறைகளில் 'மேஜர்' அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. துறை தலைவர்கள் மற்றும் பணிக்கு வரும் ஓரிரு டாக்டர்கள் சேர்ந்து, சில 'மைனர்' அறுவை சிகிச்சைகளை மட்டும் செய்து சமாளித்து வருகின்றனர்.
டாக்டர் ஒருவர் கூறியதாவது: உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில், தொலைதுார கிராமங்களில் பணி செய்யும் டாக்டர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் வழங்க உத்தரவிட்டுள்ளதே தவிர, 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. சில இடங்களில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளது. இதனால், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.டாக்டர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் நோயாளிகளை கடுமையாக பாதித்துள்ளது. பணி செய்ய விரும்பும் டாக்டர்களுக்கு சங்க நிர்வாகிகள் மிரட்டல் விடுக்கின்றனர்.
அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் இருதய நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழப்பு நேரலாம். புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை தாமதித்தால், நோய் முற்றி குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுவர். டாக்டர்களுக்கு இது குறித்து சொல்லித்தர வேண்டியதில்லை. எனவே, அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும், என்றார்.

மூலக்கதை