67 ரன்னில் ஆல் அவுட் கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் மிரண்டது டெல்லி டேர்டெவில்ஸ்

தினகரன்  தினகரன்

சண்டிகர்: டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மொகாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கிங்ஸ் லெவன் கேப்டன் மேக்ஸ்வெல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் அம்லா, நடராஜன், ஆரோன் இடம் பெற்றனர். டெல்லி அணியில் ஜாகீர், கம்மின்ஸ், பாவ்னே ஆகியோருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ், நதீம், முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். ஜாகீர் காயம் அடைந்துள்ளதால், டெல்லி அணி கருண் நாயர் தலைமையில் களமிறங்கியது. சஞ்சு சாம்சன், பில்லிங்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பில்லிங்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, டேர்டெவில்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. சாம்சன் 5, ஷ்ரேயாஸ் 6 ரன் எடுத்து சந்தீப் பந்துவீச்சில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.கேப்டன் கருண் 11 ரன் எடுத்து அக்சர் சுழலில் கிளீன் போல்டானார். இளம் வீரர் ரிஷப் பன்ட் 3 ரன் மட்டுமே எடுத்து மேக்ஸ்வெல் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனத் டெல்லி அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. மோரிஸ் 2 ரன் எடுத்து அக்சர் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்த கோரி ஆண்டர்சன் அதிகபட்சமாக 18 ரன் எடுத்து ஆரோன் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். ரபாடா 11, ஷமி 2, நதீம் (0) ஆகியோர் அணிவகுப்பை நிறைவு செய்ய, டெல்லி அணி 17.1 ஓவரில் 67 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அமித் மிஷ்ரா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா 4 ஓவரில் 20 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அக்சர், ஆரோன் தலா 2, மோகித், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 68 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கிங்ஸ் லெவன் களமிறங்கியது. மார்டின் கப்தில், ஹாஷிம் அம்லா இருவரும் துரத்தலை தொடங்கினர். அம்லா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய கப்தி பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டு டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார். பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கப்தில் 50 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), அம்லா 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். 9 லீக் ஆட்டத்தில் 4வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டியில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.

மூலக்கதை