கோடநாடு காவலாளி கொலையில் வியாபம் ஊழல் போன்றே அடுத்தடுத்த மர்ம மரணங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு காவலாளி கொலையில் வியாபம் ஊழல் போன்றே அடுத்தடுத்த மர்ம மரணங்கள்

சென்னை: மத்திய பிரதேச மாநில ‘வியாபம் ஊழல்’ விசாரணையில் நடந்ததைப் போலவே கோடநாடு காவலாளி கொலை வழக்கிலும் அடுத்தடுத்த மர்ம மரணங்கள் நடந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைதான 4 பேர் உண்மையான குற்றவாளிகளா? விஐபிக்கள் தொடர்பை மறைக்க முயற்சி நடக்கிறதா? வழக்கு சிபிஐக்கு மாறுமா? என்பன போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் யார்? போலீசார் இந்த வழக்கை விரைந்து முடிப்பது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

 நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள  ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூர்  என்பவர் கடந்த 23ம் தேதி மர்ம கும்பலால் கத்தியால் குத்தியும், அரிவாளால்  வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய  சதீசன், தீபு, சந்தோஷ்,  உதயகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் ஆத்தூரை சேர்ந்த  கனகராஜ் (35) என்பவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்ற போது கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவரது நண்பரும், இவ்வழக்கில்  தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி என  போலீசாரால் தேடப்பட்டு வந்த கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சயான்(33).

கோவை அருகே உள்ள  குனியமுத்தூரில் ஒரு பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சயான், தனது மனைவி வினுப்ரியா (30), மகள் நீது  (5) ஆகியோருடன், மனைவியின் சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம்  இரிஞ்ஞாலக்குடா நோக்கி நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார், பாலக்காடு அருகே கண்ணாடி பாத்திக்கல் என்ற  இடத்தில் சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த  லாரி மீது மோதியது. இதில், வினுப்ரியா, மகள் நீது  ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தலை மற்றும்  மார்பில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சயான் உயிருக்கு போராடினார்.   போலீசார் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோடநாடு வழக்கில் போலீசார் தேடுவதை அறிந்த சயான், தனது மனைவி, குழந்தையை மாமனார் வீட்டில்  விட்டு விட்டு வேறு பகுதிக்கு தப்பி செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கி,  மனைவி, மகளை இழந்துவிட்டதாக நீலகிரி எஸ்பி முரளிரம்பா நேற்று தெரிவித்தார்.

சயான்  சிகிச்சை பெறும் வார்டில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   சயான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு கோவை ஜே. எம். எண் 5  மாஜிஸ்திரேட் செல்வக்குமார் நேற்று நேரில் சென்று விபத்து தொடர்பாக  சயானிடம் வாக்குமூலம் பெற்றார். இவரது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து  நேரிடலாம் என்பதால் கொலை வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் பெற்றதாக  தெரிகிறது.

இந்த வாக்குமூலம் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்நிலையில்  2வது நாளாக இன்றும் சயானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இன்று காலை டிஎஸ்பி சீனிவாசலு மருத்துவமனைக்கு சென்று சயானை  பார்வையிட்டதுடன், அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம்  கேட்டறிந்தார். விபத்தில் பலியான சயான் மனைவி வினுப்பிரியா, மகள் நீது  ஆகியோர் சடலத்தை போலீசார் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் போது இருவரது கழுத்திலும் ஆழமான  வெட்டுகாயம் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது  இடிபாடுகளில் சிக்கி இந்த காயம் ஏற்பட வாய்ப்பில்லை இதனால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு பின்னர் விபத்து நடந்தது போல் ஏற்பாடு செய்யப்பட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது பங்களாவில் எந்த பொருட்களும் கொள்ளை போக வில்லை. கொள்ளை முயற்சி மட்டுமே நடந்துள்ளது.

கொள்ளையர்களை தடுக்க முயன்ற போது தான் காவலாளி படுகொலை செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் தற்போது கேரளாவில் 4 பேர் கைது செய்யப்பட்ட பிறகு போலீசார் பங்களாவில் ஜெயலலிதா மற்றும் சசிகலா அறையில் இருந்த வாட்ச் மற்றும் அலங்கார பொருட்கள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 முதலில் கோடநாடு பங்களாவில் கொள்ளை சம்பவங்களே நடைபெற வில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக போலீசாரே தெரிவித்துள்ளனர். இதனால் கோடநாடு பங்களாவில் எவ்வளவு பொருட்கள் கொள்ளை போனது என்ற தகவல் வெளியாகவில்லை.

மேலும் முன்னாள் முதல்வர் என்பதால் பல முக்கிய ஆவணங்கள் கோடநாடு பங்களாவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கொள்ளையர்கள் பணத்திற்காக இந்த  கொள்ளை சம்பவத்தை நடத்தியதாக தெரியவில்லை.

ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை நன்கு தெரிந்த நபர்கள் மூலம் தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அதேபோல், இந்த கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு  வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மற்றும் அவரது நண்பர் மனைவி மற்றும் மகள் மர்மமான முறையில் அதுவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இறந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கனகராஜ் நண்பர் சயான் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இவரை படுகொலை செய்ய பல்வேறு வழிகளில் முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கோடநாடு மர்மத்தில் அடுத்தடுத்து மரணங்கள் நடந்து வருவதால் அனைவருக்கும் பெருத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் ‘வியாபம்’ (டிஎன்பிஎஸ்சி போன்ற அமைப்பு) முறைகேடு தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 அப்போது விசாரணை அதிகாரிகள் முதல் முக்கிய குற்றவாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அப்போது இந்த வழக்கில் 2108 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகள் 417 பேர் தலைமறைவாகினர். விசாரணை நடந்த போது விசாரணை அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் என 47 பேர் மர்மமான முறையில் இறந்தனர்.   இதை ‘வியாபம் மர்ம மரணங்கள்’ என்று கூறினர்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோன்று கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் வியாபம் போன்றே அடுத்துடுத்து மரணங்கள் நடந்து வருவதால் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் முக்கிய நபர்கள் யாரோ இருக்கிறார்கள்.

அவர்களை காப்பாற்றவே போலீசார், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் இறந்ததால் அவர் மீது பழியை போட்டு வழக்கை முடிக்க பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கோடநாடு கொலை கொள்ளை மற்றும் தொடர் மர்ம மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே பல மர்ம முடிச்சுகளுக்கு விடை கிடைக்கும்.

போலீசார் இந்த வழக்கை சாதாரண வழக்காக முடிக்கப் பார்ப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ெபாது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் வேண்டுகோளாக உள்ளது.

.

மூலக்கதை