காற்று வெளியிடை கதவு திறந்தது: காஷ்மீருக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா

தினமலர்  தினமலர்
காற்று வெளியிடை கதவு திறந்தது: காஷ்மீருக்கு படையெடுக்கும் தமிழ் சினிமா

ஒரு காலத்தில் காஷ்மீர் தமிழ் சினிமாவின் கனவு தேசமாக இருந்தது. தேனிலவு தொடங்கி ரோஜா வரை காஷ்மீரில் ஏராளமான தமிழ் படங்கள் படமாக்கப்பட்டது. கடைசியாக ராதிகா ஆப்தே, அஜ்மல் நடித்த வெற்றிச் செல்வன் என்ற படம் காஷ்மீரில் படமானது. அதன் பிறகு அங்கு கலவரங்கள் அதிகமாகி படப்பிடிப்புகள் நின்று போனது.
பல வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் காஷ்மீருக்கு சென்று காற்று வெளியிடை முழுப் படத்தையும் அங்கு படமாக்கினார். அதுவும் கட்டப்பாடுகள் நிறைந்த காஷ்மீர் ராணுவ முகாம்களில் படமாக்கினார். காற்று வெளியிடை படத்திற்கு பிறகு காஷ்மீரில் படம்பிடிப்பு நடத்த பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.
விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் படமானது. படப்பிடிப்புக்கு சென்று வந்த பிரபு காஷ்மீர் முன்பு போன்று இல்லை. நல்ல பாதுகாப்பு இருக்கிறது. பிரச்சினைகள் இல்லை. தாராளமாக படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிவித்தார்.
நஞ்சுபுரம், கத சொல்லப்போறோம், படத்தை இயக்கிய சார்லஸ் இயக்கும் புதிய படமான சாலை படம் முழுவதும் தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் புதுமுகங்கள் விஷ்வா, கிரிஷா, நரேன், ஸ்ருதி மேனன் நடித்து வருகிறார்கள். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பகுதியை எட்டியிருக்கிறது.
அடுத்து சிபிராஜ், நிகிதா விமல் நடிக்கும் ரங்கா படத்தின் ஒரு பகுதி கதை காஷ்மீரில் நடக்கிறது. படக்குழுவினார் கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கிறார்கள். கதைக்கான காட்சிகளுடன் இரண்டு பாடல் காட்சிகளையும் படமாக்கி இருக்கிறார்கள். கடும் பனிப்பொழிவுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
அடுத்து விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், வெங்கட் பிரபு அடுத்து இயக்க உள்ள படம். உள்ளிட்ட பல படங்கள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. பல படங்களின் இயக்குனர்கள் பாடல் காட்சிகளை மட்டும் காஷ்மீரில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் சுற்றுலா பயணிகளின் வரவு குறைந்து விட்டதால் அதை மாற்றிக் காட்ட படப்பிடிப்புகளுக்கு உடனடி அனுமதி தருவதுடன் தகுந்த பாதுகாப்பும் தருகிறதாம் காஷ்மீர் அரசு.

மூலக்கதை