சிவகுமாரை தாதாவாக்கிய வண்டிச்சக்கரம்

தினமலர்  தினமலர்
சிவகுமாரை தாதாவாக்கிய வண்டிச்சக்கரம்

சிவகுமார் என்றால் நல்லவர் என்ற இமேஜ்தான் தமிழ் நாட்டில் இருந்தது. காரணம் அவர் பாசிட்டிவான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார். அவரது கேரியரில் புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு ராமன் பரசுராமன் படத்தில் இரட்டை வேடத்தில் ஒரு சிவகுமார் வில்லன். மற்றபடி அவர் வில்லனாக அதிகமாக நடித்ததில்லை. இன்றைக்கு எல்லா நடிகர்களுமே தாதவாக நடித்து விட்டார்கள். சிவகுமார் தாதாவாக நடித்த படம் வண்டிச்சக்கரம்.
களையான முகம் தாதா கேரக்டருக்கு செட்டாகுமா என்று பலரும் யோசித்தபோது சரியாக வரும் என்று அடித்துச் சொன்னவர் வினுசக்ரவர்த்தி. அவர்தான் கதை, திரைக்கதை வசனம் எழுதியவர். விஜயன் இயக்கினார். அதேபோல தான் அடுத்து இயக்க இருந்த படத்தில் நாயகியாக நடிக்க தேர்வு செய்து வைத்திருந்த விஜயலட்சுமி என்பவரை இந்தப் படத்தில் சாராய கடையில் வேலை பார்க்கும் சில்க் என்ற கேரக்டரில் நடிக்க வைத்து அவரை சில்க் ஸ்மிதாவாக மாற்றியவரும் வினு சக்ரவர்த்திதான்.
மார்க்கெட்டில் கந்து வட்டி வசூலிக்கும் தாதா சிவகுமாரை அதே மார்க்கெட்டில் சாப்பாட்டு கூடை சுமக்கும் சரிதா நல்லவனாக மாற்றுகிற கதை. கிட்டத்தட்ட புதிய பாதை படத்தின் முன் கதை என்று சொல்லாம். அமைதியாக நடிக்கும் சிவகுமார் ஆர்ப்பாட்டமாக நடித்த படம். சிறந்த நடிகருக்கான விருதுகள் பல இந்தப் படத்தின் மூலம் சிவகுமாருக்கு கிடைத்தது. 1980ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியும் பெற்றது.

மூலக்கதை