9 லட்சம் போலி நிறுவனங்கள்?சாட்டையை எடுக்கிறது அரசு

தினமலர்  தினமலர்
9 லட்சம் போலி நிறுவனங்கள்?சாட்டையை எடுக்கிறது அரசு

புதுடில்லி, கம்பெனிகள் விவகாரத் துறையில் பதிவு செய்த, ஒன்பது லட்சம் நிறுவனங்கள், ஆண்டு கணக்கு தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, டில்லியில் நடந்த அமலாக்கப் பிரிவு தின விழாவில், வருவாய் துறைச் செயலர், ஹஷ்முக் ஆதியா பேசியதாவது:

கம்பெனிகள் விவகாரத் துறையில் பதிவு செய்யப்பட்ட, 15 லட்சம் நிறுவனங்களில், ஒன்பது லட்சம் நிறுவனங்கள், ஆண்டு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை; இவற்றில் பெரும்பாலானவை போலி நிறுவனங்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.இதுகுறித்து விசாரணையை துவக்கி உள்ளோம். இந்த நிறுவனங்களை கண்காணிக்க, பிரதமர் அலுவலகம், கண்காணிப்பு குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. போலி நிறுவனங்கள் குறித்த தகவல்களை அந்த குழு, சேகரிக்கும்; அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற நிறுவனங்கள் சிலவற்றிற்கு, ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளோம். போலி நிறுவனங்களுக்கு எதிராக, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

'விரைவான நடவடிக்கை'
டில்லியில் நடந்த அமலாக்கப் பிரிவு தின விழாவில் பங்கேற்ற, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசியதாவது:
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பதிலும், வரி முறைகேட்டை கண்டுபிடிப்பதிலும், அமலாக்கப் பிரிவு முக்கிய பங்காற்றி வருகிறது. அதேசமயம், சட்ட விரோத நிதி முறைகேடு களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து, அவர்களை விரைவாக
தண்டிப்பது மிக அவசியம்; குறிப்பாக முக்கிய வழக்குகளில், தாமதமின்றி நீதி கிடைக்க வேண்டும்; இதற்கு தேவையான
நடவடிக்கைகளை, அமலாக்கப் பிரிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை