சூப்பர்ஜயன்ட் அபார பந்துவீச்சு ஆர்சிபி மீண்டும் படுதோல்வி

தினகரன்  தினகரன்

புனே: ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 61 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. புனே, மாகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் கிறிஸ் கேல், மன்தீப், அனிகேத் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆடம் மில்னி, ஸ்டூவர்ட் பின்னி, சச்சின் பேபி சேர்க்கப்பட்டனர். புனே அணியில் ஷர்துல் தாகூர், டு பிளெஸ்ஸிக்கு பதிலாக தீபக் சாஹர், பெர்குசன் இடம் பெற்றனர். சூப்பர்ஜயன்ட் தொடக்க வீரர்களாக ரகானே, திரிபாதி களமிறங்கினர். ரகானே 6 ரன் எடுத்து பத்ரீ சுழலில் மில்னி வசம் பிடிபட்டார். திரிபாதி - கேப்டன் ஸ்மித் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 40 ரன் சேர்த்தது.திரிபாதி 37 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி நேகி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கேதார் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஸ்மித்துடன் மனோஜ் திவாரி இணைந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 33 பந்தில் 50 ரன் சேர்த்தனர். ஸ்மித் 45 ரன் எடுத்து (32 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் திவாரி - டோனி ஜோடி அதிரடியில் இறங்க சூப்பர்ஜயன்ட் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. திவாரி 44 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), டோனி 21 ரன்னுடன் (17 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், கேப்டன் கோஹ்லி இருவரும் இணைந்து துரத்தலை தொடங்கினர். ஹெட் 2 ரன் மட்டுமே எடுத்து உனத்காட் வேகத்தில் கிளீன் போல்டாக, ஆர்சிபி அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து வந்த அதிரடி வீரர் டி வில்லியர்சும் 3 ரன் மட்டுமே எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் திவாரியிடம் பிடிபட, பெங்களூர் அணி திணறியது. ஒரு முனையில் கோஹ்லி உறுதியுடன் போராட, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.சூப்பர்ஜயன்ட் பவுலர்கள் சுந்தர், பெர்குசன், தாஹிர், உனத்காட் ஆகியோர் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்ததால், ஆர்சிபி ரன் குவிக்க முடியாமல் தட்டுத்தடுமாறியது. கோஹ்லி தவிர்த்து மற்ற வீரர்களில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்னை எட்டமுடியாதது குறிப்பிடத்தக்கது. நேகி, மில்னி, பத்ரீ மூவரும் தாஹிர் சுழலில் வரிசையாக மூழ்கினர். சக வீரர்களின் மோசமான பேட்டிங்கால் விரக்தியில் ஆழ்ந்த கோஹ்லி 55 ரன் எடுத்து (48 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) கிறிஸ்டியன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன் மட்டுமே சேர்த்து 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அரவிந்த் 8, சாஹல் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புனே பந்துவீச்சில் 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 7 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய பெர்குசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தாஹிர் 3, உனத்காட், கிறிஸ்டியன், சுந்தர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பத்து லீக் ஆட்டத்தில் 7வது தோல்வியை சந்தித்ததால் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அடியோடு குறைந்துவிட்டது.

மூலக்கதை