பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்

மணிலா: பிலிப்பைன்சில் நேற்று 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. 2 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு மிண்டானோ. நேற்று அதிகாலை 4.23 மணி அளவில், இங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் சேதமடைந்தன. வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, மிண்டானோ மற்றும் இந்தோனேஷியா கடல் பகுதிகளில் பயங்கரமான அலைகள் எழும்பும் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். சுனாமி எச்சரிக்கையும் விடுத்தனர். இருப்பினும் 2 மணி நேரம் கழித்து சுனாமி அறிவிப்பை திரும்ப பெற்றனர். மிண்டானோ தீவின் கடற்கரையில் 41 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் சேவை நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், பிலிப்பைன்ஸ் அரசு நிறுவனமான எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் பயிலகம் மிண்டானோவின் தெற்கு கரையிலிருந்து 53 கிமீ தூரத்தில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளது. இது 7.2 ரிக்டராக பதிவானது என்றும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை