மர்மக்கும்பல் அட்டகாசம் பாக்.கில் இந்து கோயில் சூறை சிலைகளை கழிவுநீரில் வீசினர்

தினகரன்  தினகரன்

கராச்சி: பாகிஸ்தானில் பாரம்பரிய இந்து கோயில் ஒன்று சூறையாடப்பட்டது. அங்கு இருந்த சாமி சிலைகள் கால்வாயில் தூக்கி வீசப்பட்டன.பாகிஸ்தானில் தெற்கு சிந்து மாகாணத்தில் காரோ என்ற நகர் உள்ளது. கராச்சியில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் வழிபட வசதியாக அங்கு ஒரு இந்து கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பாரம்பரியம்மிக்க இந்த கோயிலில் நேற்று அதிகாலை 1 மணி முதல் 5 மணிக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோயிலை சூறையாடி உள்ளனர். மேலும் கோயிலில் இருந்த சாமி சிலைகளை தூக்கிச்சென்று அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் தூக்கிப்போட்டு உடைத்துவிட்டு சென்றுள்ளனர்.நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் சூறையாடப்பட்டு இருப்பதையும், சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் மத அவமதிப்பு மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடையாளம் தெரியாத 3 நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூலக்கதை