ஆசிரியர் தகுதி தேர்வு அறைக்கு கர்சீப் கொண்டு செல்ல தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிரியர் தகுதி தேர்வு அறைக்கு கர்சீப் கொண்டு செல்ல தடை

திருவள்ளூர்: ஆசிரியர் தகுதி தேர்வு அறைக்குள் கர்சீப் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாததால் வியர்க்க, வியர்க்க தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று, முதல் தாள் தேர்வு எழுத 11,407 பேரும், நாளை 2ம் தாள் தேர்வு எழுத 15,059 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வு இன்று 28 மையங்களிலும், நாளை 37 மையங்களிலும் நடைபெறுகிறது.

முதல் தாள் தேர்வுக்கு 694 கண்காணிப்பாளர்கள், 2ம் தாள் தேர்வுக்கு 916 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்வர்களை முழு சோதனை செய்ய 245 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இன்று, முதல் தாள் தேர்வு எழுத வந்த தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஹால் டிக்கெட்டுடன் 2 பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

கால்குலேட்டர், செல்போன், கைக்கடிகாரம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ‘கர்சீப்’ எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வர்கள் கூறுகையில், ‘மையங்கள் அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் அமைக்கப்பட்டுள்ளன.

பல அரசு பள்ளிகளில் மின்விசிறி இல்லை.

கொளுத்தும் கோடையில் நடக்கும் தேர்வில், வியர்க்கும்போது அதை துடைக்க ‘கர்சீப்’க்கு கூட அனுமதி வழங்காதது வேதனையாக உள்ளது’ என்றனர்.

.

மூலக்கதை