இரட்டை இலை பெற ரூ.50 கோடி பேரம் தினகரன் கூட்டாளிகள் 5 பேரிடம் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இரட்டை இலை பெற ரூ.50 கோடி பேரம் தினகரன் கூட்டாளிகள் 5 பேரிடம் விசாரணை

சென்னை: ஹவாலா வழக்கில் தினகரனுக்கு உடந்தையாக இருந்ததாக 5 பேரிடம் தனித் தனியாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பலரை போலீசார் சென்னையில் முகாமிட்டு தேடி வருவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதையடுத்து அதை சசிகலா அணிக்கு பெற்று தருவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் டிடிவி. தினகரன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் ரூ. 50 கோடி பேரம் பேசியுள்ளார். முதற்கட்டமாக ரூ. 1. 30 கோடி பணம் ஹவாலா ஏஜென்ட்கள் மூலம் தரப்பட்டதாக கூறப்–்படுகிறது.



இது தொடர்பாக டெல்லி குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெங்களூரை சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திர சேகரை கடந்த 16ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி. தினகரன், மல்லிகார்ஜூனா, தினகரன் உதவியாளர் ஜனார்த்தனன், வக்கீல் குமார் ஆகியோருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர். இதை தொடர்ந்து விசாரணைக்கு டெல்லி வந்த டிடிவி.

தினகரன், மல்லி கார்ஜூனாவிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முதலில் மறுத்த அவர்கள் பின்னர் பணம் கொடுத்ததாக ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தனர்.

அப்போது, டிடிவி தினகரன் குறித்த முழு தகவல்களையும், ேதர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேரம் பேசியவர்கள் மற்றும் பணம் கொண்டு வந்த ஹவாலா ஏஜென்ட்கள் குறித்த விவரங்களையும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அந்த விவரங்களின் அடிப்படையில் ரூ. 50 கோடி ஹவாலா பணத்தை டிடிவி தினகரனிடம் இருந்து டெல்லிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய ஏஜென்டாக செயல்பட்ட நத்துசிங் என்கிற நரேஷை நேற்று டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, டிடிவி. தினகரன் மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலரிடம் இருந்து ரூ. 50 கோடி ஹவாலா பணத்தை தனித்தனியாக ‘குருவிகள்’ மூலம் பிரித்து கொண்டு வரப்பட்டது குறித்தும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, ஒவ்வொரு குருவியிடமும் தலா ரூ. 10 கோடி வீதம் தனி,தனியாக வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து ஹவாலா பணம் ெகாண்டு வர குருவியாக செயல்பட்டவர்கள் யார், யார் என்பது குறித்து நரேஷ் டெல்லி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் பொதுப்பணித்துறை ஊழியர் மோகன், பாரிமுனை நாராயண முதலி தெருவை சேர்ந்த நரேந்திர குமார், திருவேற்காடு சுந்தர சோழபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த கோபி நாத், கொளபாக்கம் மேக்ஸ் ஓர்த் நகரை சேர்ந்த பிலிப் டேனியல், மண்ணடியை சேர்ந்த ஒருவரின் வீடுகளில் டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

 அப்போது, அவர்களது வீடுகளில் பணம் கைமாறியது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

அந்த ஆவணத்தின் பேரில் அந்த 5 பேரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி  பெசன்ட்நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து டெல்லி போலீசார் அந்த 5 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

ஒவ்வொருவரிடம் சுமார் 1 மணி நேரம் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

 அப்போது, அவர்களிடம் ஹவாலா பணம் உங்களிடம் நேரில் வந்து கொடுத்தது யார்? நீங்கள் அதை பெற்று கொண்டு டெல்லியில் யாரிடம் ஒப்படைக்க வேண்டும், அங்குள்ள நபர்களுக்கு நரேஷ் தொடர்பு குறித்தும் விசாரணையில் போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் டிடிவி தினகரன் வேண்டப்பட்டவர்கள் மூலமும், அமைச்சர்களின் நெருக்கமானவர்கள் மூலமும் பணம் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாரி முனையை சேர்ந்த ஒருவர் உட்பட இன்னும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

டிடிவி தினகரன் வழக்கில் ஹவாலா பணத்தை மாற்ற உதவியாக இருந்த குருவிகள் சிக்கியிருப்பது முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளது.

.

மூலக்கதை