அட்சயதிரிதியை முன்னிட்டு பல லட்சம் பேர் நகை வாங்கினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அட்சயதிரிதியை முன்னிட்டு பல லட்சம் பேர் நகை வாங்கினர்

சென்னை: கடைகளில் விடிய விடிய கூட்டம் அட்சயதிரிதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் விடிய விடிய  கூட்டம் அலைமோதியது. இன்று விடுமுறை தினம் என்பதால் மேலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3வது திருதியையான வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

 குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அதன்படி இந்தாண்டு அட்சதிரிதியை 2 நாட்கள் நீடிக்கிறது. அதாவது நேற்று காலை 11 மணி மணிக்கு ெதாடங்கிய அட்சரிதியை இன்று பிற்பகல் வரை நீடிக்கிறது.

இதற்காக நேற்று நள்ளிரவு 12 மணி வரை நகைக்கடைகள் திறக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் இரவு என்றும் பாராமல் நகைகளை வாங்கி சென்றனர்.

அட்சதிரிதியையின் 2வது நாளான இன்று காலை 6 மணிக்கே தமிழகம் முழுவதும் நகைக்கடைகள் திறக்கப்பட்டன.

இதனால் காலை முதலே நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த காட்சியை காணமுடிந்தது. அது மட்டுமல்லாமல் இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் நகைக்கடையை நோக்கி முற்றுகையிட தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையில் நகைக்கடைகள் அதிகம் உள்ள பகுதியான தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேரம் ஆக, ஆக மேலும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் அட்சயதிரிதியை முன்னிட்டு மட்டும் சுமார் 1 கோடி பேர் நகைக்கடைகளுக்கு வந்து போய் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 50 லட்சம் பேர் நகைக்கடைகளுக்கு வந்து நகை வாங்கி உள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் நகைக்கடைகளுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் அளவுக்கு தங்கம் நகை விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.



.

மூலக்கதை