கோடநாடு காவலாளி கொலை வழக்கு போலீசாரால் தேடப்பட்ட ஜெ. கார் டிரைவர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோடநாடு காவலாளி கொலை வழக்கு போலீசாரால் தேடப்பட்ட ஜெ. கார் டிரைவர் பலி

ஆத்தூர்: கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜெய லலிதா வீட்டின் முன்னாள் கார் டிரைவர், ஆத்தூரில் நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரை பற்றி விசாரிக்க ஊட்டி தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சமுத்திரம் சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பகவுண்டர். இவரது மகன் கனகராஜ் (35).

இவர், சென்னை போயஸ் தோட்டம் ஜெயலலிதா வீட்டிலும், கோடநாட்டிலும் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன் கலைவாணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், போயஸ் தோட்ட கார் டிரைவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார்.

இதன்பின் சென்னை வடபழனியில் தங்கியிருந்து கார் ஓட்டி வருகிறார்.

சொந்த ஊருக்கு வந்திருந்த கனகராஜ் நேற்று காலை, ஆத்தூர் சக்திநகரில் உள்ள தனது சித்தி சரசு வீட்டிற்கு சென்றார். அங்கு, அவரது மகன் ரமேசுக்கு பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு, ஆத்தூர் டவுனில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் நேற்றிரவு வந்துள்ளார்.

சென்னை-சேலம் பைபாஸ் சாலையில் சந்தனகிரி பிரிவு ரோட்டில் வந்தபோது கனகராஜ் வந்த பைக் மீது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ், சம்பவ இடத்தில் பலியானார்.



விபத்து தொடர்பாக கனகராஜின் அண்ணனான சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் தனபால் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விபத்ைத ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த தம்மம்பட்டியை சேர்ந்த ரபீக் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் கனகராஜை போலீசார் தேடி வந்தனர்.

ஊட்டி தனிப்படை போலீசார், கனகராஜை தேடி கடந்த 3 நாட்களாக வடபழனியில் முகாமிட்டுள்ளனர். ஆனால் அவர், சேலம் வந்து ஆத்தூருக்கு சென்றுள்ளார்.

அவர் போலீசில் இருந்து தப்பிக்க ஆத்தூர் வந்து தலைமறைவானாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கனகராஜ் விபத்தில் இறந்ததையடுத்து, ஊட்டி தனிப்படை போலீசார் சேலம் விரைந்துள்ளனர். அவர்கள் இன்று மதியம் ஆத்தூர் சென்று விசாரிக்கவுள்ளனர்.

காவலாளி கொலையில் கனகராஜிக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், அங்கிருந்து ஆவணங்களை எடுத்து பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுதொடர்பாக ஊட்டி தனிப்படை போலீஸ் விசாரணை முழுமையாக முடிந்தபின்னர் தான் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் சேலத்தில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை