டெல்லியில் ஹவாலா தரகர் கைது சென்னையில் அதிகாரிகளுக்கு சம்மன்; வக்கீல் வீட்டில் சோதனை

PARIS TAMIL  PARIS TAMIL
டெல்லியில் ஹவாலா தரகர் கைது சென்னையில் அதிகாரிகளுக்கு சம்மன்; வக்கீல் வீட்டில் சோதனை

சென்னையில் முன்னாள் அதிகாரி ஒருவருக்கும், தனியார் நிறுவன அதிகாரிக்கும் சம்மன் வழங்கியுள்ள டெல்லி போலீசார், வக்கீல் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

தினகரன் கைது

இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் சஞ்சய் செராவத் தலைமையிலான போலீஸ் படையினர் தினகரனையும், மலிலிகார்ஜூனாவையும் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹவாலா தரகர்

இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே ரூ.10 கோடி பண பரிமாற்றத்தில் தொடர்பாளராக செயல்பட்டவர், டெல்லி சாந்தினி சவுக் பகுதியை சேர்ந்த ஹவாலா தரகர் (சட்டவிரோத பண பரிமாற்ற தொடர்பாளர்) நரேஷ் என்ற நத்துசிங் என்பதை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

அவரை பற்றிய தகவல்களை சேகரித்தனர். அவர் தாய்லாந்து சென்றிருப்பதை அறிந்து அவரது வருகைக்காக காத்திருந்தனர்.

விமான நிலையத்தில் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டெல்லி திரும்பிய நரேஷ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நரேஷை சாணக்கியபுரி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று முதல்கட்ட விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், அதைத் தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு தனிக்கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதற்கிடையே இந்த பேரம் தொடர்பாக மற்றொருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ரூ.10 கோடி

ஷா பைசல் என்ற ஹவாலா ஏஜெண்டிடம் ஏற்கனவே டெல்லி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை அடையாளம் காட்டினார். சுகேஷ் சந்திரசேகருக்கு இவர் ஹவாலா பரிவர்த்தனை மூலமாக ரூ.10 கோடி தந்ததாக கூறப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் அந்த பணத்தை சென்னையில் இருந்து கொச்சி வழியாக டெல்லி சாந்தினி சவுக் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு உதவியதாக கூறப்படுகிறது. ஆனால் ஷா பைசல் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்த வழக்கில் டெல்லி போலீசார் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட  ஓட்டல் அறையில் ஏற்கனவே அவருக்கு நெருக்கமான ஒருவர் இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நபர் இந்த நரேஷ் ஆக இருக்கலாம் என்று டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைப்பு

சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு தனிக்கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று போலீசார் அவரை ஆஜர்படுத்தினார்கள். அவரை மே 12–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னாள் அதிகாரிக்கு சம்மன்

சென்னை அழைத்து வரப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனிடம் ராஜாஜி பவனில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேற்று 2–வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இதேபோல் மல்லிகார்ஜூனாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் போலீசார் நேற்று காலை 11.15 மணிக்கு சென்னை ஆதம்பாக்கம் நிலமங்கை நகர் திருவள்ளுவர் தெருவில் உள்ள மோகன் என்ற ஓய்வுபெற்ற அதிகாரியின் வீட்டுக்கு சென்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது சொந்த ஊர் மன்னார்குடி ஆகும்.

ஆனால் போலீசார் சென்ற போது மோகன் அங்கு இல்லை. இதனால் அவர் வரும் வரை போலீசார் காத்து இருந்தனர். சிறிது நேரத்தில் மோகன் வீட்டுக்கு வந்தார். அவரிடம் உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் அரை மணி நேரம் விசாரணை நடத்தினார். பின்னர், விசாரணைக்காக வருகிற 2–ந் தேதி நேரில் ஆஜராகுமாறு கோரி அவரிடம் சம்மன் வழங்கினார்.

சுமார் 1 மணி நேர விசாரணைக்கு பின்னர் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஹவாலா பணம் கைமாறிய விவகாரத்தில் மோகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தனியார் நிறுவன அதிகாரி

பின்னர் போலீசார் அங்கிருந்து போரூரை அடுத்த கொளப்பாக்கம் மேக்ஸ்வொர்த் நகரில் உள்ள பெலிக்ஸ் டேனியல் என்பவரின் வீட்டுக்கு சென்றனர். பெலிக்ஸ் டேனியல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் அவரது தாயார் எலிசபெத் பிரமிளா மட்டும் இருந்தார். வீட்டுக்கு திடீரென்று போலீசார் வந்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். பெலிக்ஸ் டேனியல் வீட்டில் இருக்கிறாரா? என்று போலீசார் கேட்டதற்கு, அவர் வேலைக்கு சென்று விட்டதாக தாயார் எலிசபெத் பிரமிளா தெரிவித்தார்.

இதையடுத்து, தாங்கள் டெல்லி போலீசார் என்றும் பெலிக்ஸ் டேனியல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கூறி அவரது தாயாரிடம் சம்மனை கொடுத்தனர்.

வக்கீல் வீட்டில் சோதனை

அதன்பிறகு திருவேற்காடு, சுந்தரசோழபுரம், பஜனை கோவில் தெருவில் உள்ள கோபிநாத் என்ற வக்கீலின் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் சென்ற போது கோபிநாத் வீட்டில் இல்லை. அவரது தாயார் காமாட்சி மட்டும் இருந்தார்.

வீட்டுக்குள் சென்ற டெல்லி போலீசார், ‘‘உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் அதற்கு எங்களிடம் அனுமதி உள்ளது’’ என்று கூறி அதற்கான அனுமதி கடிதத்தை காமாட்சியிடம் காண்பித்தனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் அந்த வீட்டின் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை போட்டனர். ஆனால் இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

மேற்கண்ட 3 இடங்களுக்கும் டெல்லி போலீசாருடன் தமிழக போலீசாரும் சென்றனர். மேலும் ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களும் சென்றனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

16 பேருக்கு சம்மன்

டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் பேரிலும் 16 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டனர்.

சிலருக்கு நேரடியாகவும், பலருக்கு தபால் மூலமாகவும் டெல்லி போலீசார் சம்மனை அனுப்பி உள்ளனர். அந்த வகையில் சம்மன் பெற்ற வக்கீல் ஒருவர் நேற்று ராஜாஜி பவன் வந்து ஆஜரானார். அவரிடம் டெல்லி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அதுபோல சம்மன் பெற்றவர்கள் டெல்லி போலீசார் சென்னையில் இருக்கும் வரை ராஜாஜி பவனில் வந்து ஆஜராகலாம் என்றும், அப்படி இல்லையென்றால் வருகிற 2–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் வந்து ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டெல்லி போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ள 16 பேர் யார்? யார்? என்பது குறித்த தகவலை ரகசியமாக வைத்து இருக்கின்றனர்.

டெல்லி போலீசார் மேலும் ஒரு நாள் சென்னையில் தங்கி இருந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், விசாரணையை முடித்துவிட்டு டி.டி.வி.தினகரனை பெங்களூர் அல்லது கொச்சி அழைத்து சென்று அங்கும் விசாரணையை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

மூலக்கதை