பேச்சுவார்த்தைக்கு சுமுகமான சூழலை அவர்கள் உருவாக்க வேண்டும்!!கே.பி.முனுசாமி

PARIS TAMIL  PARIS TAMIL
பேச்சுவார்த்தைக்கு சுமுகமான சூழலை அவர்கள் உருவாக்க வேண்டும்!!கே.பி.முனுசாமி

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியினர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.

பிற்பகல் 1 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியில் இணைவதற்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் அவருடைய அணியை சேர்ந்த மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உள்பட பலர் இருந்தனர்.
சுமுகமான சூழ்நிலை

அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியில் தன்னை இணைத்துக் கொண்ட கார்த்திக் தொண்டைமான் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று அவர் வழியில் தொடர்ந்து நடக்க முடிவு செய்து இணைந்துள்ளேன்’ என்றார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– இரு அணி தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறீர்கள். பேச்சுவார்த்தை எப்போது தான் நடக்கும்?

பதில்:– சுமுகமான சூழ்நிலை வரும்போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
நாங்கள் தயாராக இருக்கிறோம்

கேள்வி:– அ.தி.மு.க. (அம்மா) அணியினர் உங்கள் தரப்பில் இருந்து வரும் பதிலை தான் எதிர்பார்த்து காத்து இருப்பதாக கூறி இருக்கிறார்களே? உங்கள் தரப்பின் நிலைப்பாடு என்ன?

பதில்:– நாங்கள் தயார் என்று அவர்கள்(அ.தி.மு.க. அம்மா அணி) சொல்லி இருக்கிறார்கள். அது சரி. ஆனால் சுமுகமான சூழலை அவர்கள் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கும் பட்சத்தில் நாங்களும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் உகந்த சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துவிட்டாரே? பிறகு ஏன் பேச்சுவார்த்தை நடத்த தயக்கம் காட்டுகிறீர்கள்?

பதில்:– இறுக்கமான நிலையில் இருந்து சுமுகமான சூழல் வந்து கொண்டு இருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். அது இன்னும் கனிந்து வரும்போது நாங்கள் பேச தயாராக இருக்கிறோம்.  இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மூலக்கதை