ஓட்டுக்கு பணம் கொடுத்தால்!! 6 ஆண்டு தடை சட்ட திருத்தம் கொண்டு வர தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தல்

PARIS TAMIL  PARIS TAMIL
ஓட்டுக்கு பணம் கொடுத்தால்!! 6 ஆண்டு தடை சட்ட திருத்தம் கொண்டு வர தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தல்

ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமி‌ஷன் கடிதம் எழுதி உள்ளது.

ஓட்டுக்கு பணம்

ஒவ்வொரு தேர்தலையும் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியான முறையில் நடத்தி முடிக்க தேர்தல் கமி‌ஷன் முனைப்புடன் பணியாற்றி வருகிறது. முன்பெல்லாம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு அதன் காரணமாக அசாதாரண சூழல் உருவானால் மட்டுமே தேர்தலை தள்ளி வைக்கும் நிலை ஏற்படும்.

ஆனால் சமீபகாலமாக, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் காரணத்தால் அசாதாரண சூழல் ஏற்படுவதாக கூறி தேர்தலை தள்ளி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த காரணத்தால் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளின் பொதுத்தேர்தலையும், சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையும் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டது.

சட்ட திருத்தத்துக்கு வலியுறுத்தல்

எனவே, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் உருவான புதிய யோசனையை தெரிவித்து, அதற்காக சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமி‌ஷன் கடிதம் எழுதி இருக்கிறது.

அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை கொண்டு வருமாறும் மத்திய சட்ட அமைச்சகத்தை தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் கமி‌ஷனின் நம்பிக்கை

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானால் தேர்தலில் பணநாயகத்துக்கு வழியின்றி ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பது தேர்தல் கமி‌ஷனின் நம்பிக்கை. என்றாலும் சட்ட அமைச்சகம்தான் இதுபற்றி பரிசீலித்து முடிவு எடுக்கும். சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டால் ஓட்டுக்கு பணம் வாங்குகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மட்டுமே, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை