கோடநாடு கொலையாளிகளை காப்பாற்றிய 'கேமரா': போட்டுடைக்கும் போலீஸ்

தினமலர்  தினமலர்
கோடநாடு கொலையாளிகளை காப்பாற்றிய கேமரா: போட்டுடைக்கும் போலீஸ்

கோவை: முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கோடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, கொள்ளை சம்பவத்தில், முக்கிய குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீஸ் திணறுவது ஏன், என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, 'கோடநாடு எஸ்டேட்' காவலாளி ஓம் பகதுார், 24ம் தேதி நள்ளிரவு, மர்ம கும்பலால் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுார், 35, காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட, 10க்கும் மேற்பட்ட முகமூடி நபர்கள், எஸ்டேட் பங்களாவில் நுழைந்து ஜெ., அறைகளின் கதவுகளை உடைத்து, ஏதோ பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். தமிழக அளவில், பரபரப்பை ஏற்படுத்திய இத்துணிகர சம்பவம் தொடர்பாக, காயங்களுடன் உயிர் தப்பிய சக காவலாளி கிருஷ்ண பகதுாரையே சந்தேகித்தனர் போலீசார்.

முடிவுக்கு வந்த போலீஸ் :


ஏதோ முன்விரோதம் காரணமாக இவரே, ஓம்பகதுாரை அடித்து கொன்றுவிட்டு கொள்ளை நாடகம் ஆடக்கூடும் அல்லது கொள்ளைக் கும்பலுடன் மறைமுகமாக கூட்டு வைத்திருக்கக்கூடும் எனக் கருதினர். அந்த கோணத்திலேயே, ஆரம்பகட்ட விசாரணைகள் வேகமெடுத்தன. ஐ.ஜி., - டி.ஐ.ஜி., - எஸ்.பி., என போலீஸ் உயரதிகாரிகள் பலரும் முகாமிட்டு, கிருஷ்ண பகதுாரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

'நாடகம் ஆடாமல் நடந்ததை ஒப்புக்கொள்' என்றெல்லாம் நெருக்கினர். ஆனாலும், ஆரம்பத்தில் கூறியதையே, 12 மணி நேர விசாரணைக்கு பிறகும் உறுதிபடக் கூறினார் கிருஷ்ண பகதுார். தவிர, சம்பவத்தன்று நடந்ததை விலாவாரியாக நடித்தும் காட்டினார். இதனால், அவர் மீதான சந்தேகத் திரை மறுநாள் மதியமே விலகியது; 'குற்றவாளி இவரல்ல' என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.

லாரியில் ரத்தக்கறை எப்படி :


போலீசாரிடம் கிருஷ்ண பகதுார் அளித்த வாக்குமூலம்: கொலை செய்யப்பட்ட ஓம் பகதுார் வயதில் மூத்தவராக இருந்தாலும், என்னுடன் நன்றாக பழகக்கூடியவர். அருகருகே உள்ள நுழைவாயில்களில் தான் எங்களுக்கு அன்றைய தினம் வேலை. அவர், 10ம் எண் கேட்டில் இருந்தார்; நான், 9ம் எண் கேட்டில் இருந்தேன். அதிகாலை, 3:00 மணி இருக்கும்; ஓம் பகதுாரின் கதறல் கேட்டது. அவரை சிலர் அடித்துக் கொண்டிருந்தனர். கூச்சலிட்டவாறே உதவிக்கு ஆட்களை அழைத்து வர ஓட முயற்சித்தேன். என்னையும் சுற்றிவளைத்து தாக்கினர். கத்தி போன்ற ஆயுதம் பட்டு காயம் ஏற்பட்டது. வாயை பொத்தி, கை, கால்களை கட்டி, சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த, எஸ்டேட் சரக்கு லாரியின் பின்னால் துாக்கிப் போட்டனர். 'கூச்சலிட்டால் கொன்று விடுவோம்' என, மிரட்டியதால் பயந்து அப்படியே படுத்து விட்டேன். அதன்பின், அந்நபர்கள் பங்களா பக்கம் ஓடினர்.

வெகுநேரம் வரை லாரியிலேயே கிடந்த நான், அவர்கள் போய் விட்டதை உறுதி செய்த பின் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு, கேட் பக்கம் ஓடினேன்; ஓம் பகதுார் இறந்து கிடந்தார்.பங்களா பக்கம் சென்றேன். ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. சத்தம் போட்டு அருகிலிருந்தோரை உதவிக்கு அழைத்தேன்.இவ்வாறு வாக்குமூலம் அளித்திருந்தார்.

அவர் கூறிய இடங்களை பார்வையிட்ட போலீசார், லாரியில் இருந்து குதித்து, அங்கெல்லாம் இவர் சென்றதற்கான அடையாளமாக ரத்தக்கறை படிந்திருந்ததை உறுதிப்படுத்தினர். லாரியின் மீதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. கொலையில் இவருக்கு தொடர்பில்லை என்ற தெளிவு பிறந்தது. ஆனால், இங்கே தான் போலீசாருக்கு குழப்பமும் ஆரம்பமானது.

கூலிப்படையினர் :


சாதாரண கொள்ளை வழக்குகள் போல, இவ்வழக்கையும் எளிதாக விசாரித்து முடித்து விடலாம் எனக்கருதிய போலீஸ் அதிகாரிகள், வழக்கின் போக்கு திசை மாறுவதை உணர்ந்து, அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம், இது, நன்கு திட்டமிட்ட, 'தொழில் முறை கொலையாளிகள்' மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட அனுபவம் மிக்க நபர்களால் நடத்தப்பட்ட துணிகர கொள்ளை என்பது உறுதியானது. அதன்பிறகே, வேறு சில கோணங்களிலும் விசாரணையை திருப்பியுள்ளனர் போலீசார்.

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முகமூடி அணிந்து வந்த குற்றவாளிகளை நேரில் பார்த்தவர்கள் இருவர்; ஒருவர் இறந்து விட்டார்; மற்றொருவர் உயிருடன் உள்ளார். இரண்டாமவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், விசாரித்து வருகிறோம். முதலில், குற்றவாளிகளின் நோக்கம் புலப்பட வேண்டும். அவர்கள், எஸ்டேட் பங்களாவில் எதை கொள்ளையடிக்க வந்தனர் என்பதை உறுதி செய்தாக வேண்டும். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. காரணம், அது பற்றி அறிந்தவர் இங்கே யாருமில்லை. அடுத்ததாக, 1,000 ஏக்கர் உள்ள எஸ்டேட் வளாகத்தில், ஒரு கண்காணிப்பு கேமரா கூட கிடையாது. முதல்வராக ஜெ., இருந்த போதே இதே நிலை தான்.

'எஸ்டேட்டுக்கு வரும் நபர்கள், அவர்களது வாகனங்கள் குறித்த விபரங்கள் கேமராவில் பதிவாகி, அதன் ரகசியங்கள் எதிரிகளின் கைக்கு வீடியோ ஆதாரமாக போய்விடக்கூடாது' என்பதாலேயே, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்கின்றனர். ஜெ., உயிருடன் இருந்தவரை, 24 மணி நேரமும், கோடநாடு எஸ்டேட், துப்பாக்கி போலீசின் பாதுகாப்பில் தான் இருந்தது. அமைச்சராக, உயரதிகாரிகளாக, ஏன் டி.ஜி.பி.,யாக இருந்தாலும் கூட, 'சி.எம்.,' அனுமதியின்றி யாரும் நுழைய முடியாத கோட்டையாக திகழ்ந்தது.

'சிசிடிவி' கண்காணிப்பு தேவைப்படவில்லை. ஜெ., மறைந்த பின், போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. கேமரா கண்காணிப்பும் கிடையாது. இந்த நிலைதான், குற்றவாளிகளுக்கு சாதகமாகி விட்டது. கேமரா இருந்திருந்தால், அந்த நபர்களை எளிதாக அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம். ரகசியம் காப்பதற்காக, தவிர்க்கப்பட்ட கண்காணிப்பு கேமரா நடைமுறை, தற்போது குற்றவாளிகளை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி, எல்லா பக்கமும் புலன் விசாரணைக்கு முட்டுக்கட்டை விழுந்து விட்ட நிலையில் தான் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இருப்பினும், குற்றவாளிகளை கூடிய விரைவில் கண்டறிந்து கைது செய்வோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மூலக்கதை