அமெரிக்க ஓட்டலில் துப்பாக்கி சூடு இந்திய தொழிலாளி பரிதாப பலி

தினகரன்  தினகரன்

நியூயார்க் : அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஓட்டலில் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவர் பலியானார். அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள ஒயிட்ஹேவன் பகுதியில் பெஸ்ட் வேல்யூ இன் என்ற ஓட்டல் உள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை ேசர்ந்த காண்டு பட்டேல் (56) என்பவர் கடந்த 8 மாதமாக ஹவுஸ் கீப்பிங் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர் ஓட்டல் வளாகத்திலேயே  தனது 2 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தங்கியிருந்தார்.  இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தனது வேலை முடிந்ததை அடுத்து ஓட்டல் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக 30 முறை சுட்டார். இதில் ஒரு குண்டு காண்டு பட்டேலின் மார்பை துளைத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பட்டேலை அப்பகுதியில் உள்ள மண்டல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காண்டு பட்டேல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுஅங்கு பணியாற்றும் இந்தியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை