ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 17வது நாளாக போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 17வது நாளாக போராட்டம்

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராடி வரும் மக்கள், மண்ணை தாரை வார்க்கமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 17வது நாளாக போராட்டம் நடக்கிறது. நெடுவாசல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளே இந்த குழந்தைகளின் கதறல் கேட்கலையா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டது. இதுகுறித்து பெண்கள் கூறுகையில், நாங்கள் இன்றுடன் 17வது நாட்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறோம்.   எங்கள் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தக்கூடாது என்று நாங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையான நூதன போராட்டத்தின் மூலம் தெரிவித்து வருகிறோம்.

 ஆனால், மத்திய, மாநில அரசுகள் நாங்கள் போராடுவதை வேடிக்கை பார்க்கிறதே தவிர, இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யவில்லை.

நாங்கள் இந்த திட்டம் வேண்டாம் என்று பலமுறை கூறியும், எங்களுடைய விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கக்கூடிய இந்த திட்டத்தை ஏன் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் நேற்று திட்டத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

நாங்கள் எங்களுடைய மண்ணில் விவசாயம் செய்து வாழ்வோமே தவிர, மற்ற யாருக்கும் எங்கள் மண்ணை தாரைவார்க்க மாட்டோம் என்றனர்.

.

மூலக்கதை