'பல்சர் பைக்' கேட்ட மணமகன்; 'தலாக்' கூறிய மணமகள்

தினமலர்  தினமலர்
பல்சர் பைக் கேட்ட மணமகன்; தலாக் கூறிய மணமகள்

ராஞ்சி: திருமணம் முடிந்ததும், வரதட்சணையாக, 'பைக்' கேட்ட மணமகனுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறிய மணமகள், திருமண பந்தத்தை உடைத்தெறிந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், ராஞ்சியை சேர்ந்த அன்சாரி என்பவருக்கும், சந்வே கிராமத்தை சேர்ந்த, ருபானா பர்வீனுக்கும் திருமணம் நடந்தது.

ரூ.7.25 லட்சம் :



திருமணம் முடிந்து, மணமக்கள் கிளம்பும் சமயத்தில், மணமகளின் தந்தை, மணமகனுக்கு, வரதட்சணையாக, ஒரு பைக்கை கொடுத்தார். ஆனால், தனக்குப் பிடித்த, 'பல்சர் பைக்' தான் வேண்டும் எனக் கூறி, மணமகளின் தந்தையிடம், மணமகன் வற்புறுத்தினார். பிரச்னை பெரிதாகவே, அங்கு வந்த ருபானா, திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து, முறைப்படி, தலாக் வழங்கப்பட்டது. மணமகளின் பெற்றோர், திருமணத்திற்காக செலவழித்த, 7.25 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டதற்கு, மணமகன் வீட்டார் மறுத்தனர்.

செருப்பு மாலை :



இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் உறவினர்கள், அன்சாரி மற்றும் அவரது சகோதரனின் தலையை மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து, கழுத்தில், 'வரதட்சணை பேராசை கொண்டவன்' என்ற வாசகம் அடங்கிய அட்டையை தொங்க விட்டனர். அன்சாரியின் பெற்றோர், பணத்தை திருப்பிக் கொடுத்ததையடுத்து, மணமகனை விடுவித்தனர். அதன் பின், அன்றைய தினம் இரவே, மற்றொரு இளைஞருடன் ருபானாவுக்கு திருமணம் நடந்தது.

மூலக்கதை