காஷ்மீரில் பயங்கர தாக்குதல் ராணுவ தளபதி உள்பட 3 வீரர்கள் பலி!!!

PARIS TAMIL  PARIS TAMIL
காஷ்மீரில் பயங்கர தாக்குதல் ராணுவ தளபதி உள்பட 3 வீரர்கள் பலி!!!

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்காம் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது.

இந்த முகாமுக்குள் நுழைந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் 4 பேர் நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்கு வந்தனர்.

அவர்கள் ராணுவ முகாமின் நுழைவாயிலுக்கு அருகே தானியங்கி ஆயுதங்களை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். மேலும் ராணுவ முகாமுக்குள் கையெறி குண்டுகளை வீசினர்.

துப்பாக்கிச்சண்டை

பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலால் ராணுவ வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் முகாமுக்குள் நுழைந்துவிடாதவண்ணம் சுற்றிவளைத்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச்சண்டை நீண்ட நேரம் நீடித்தது.

இறுதியில், பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவத்தினரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மற்ற 2 பயங்கரவாதிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

3 ராணுவ வீரர்கள் வீர மரணம்

பயங்கரவாதிகள் சுட்டதில், ராணுவ தளபதி ஒருவர் மற்றும் ஜூனியர் ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். மேலும் ராணுவ வீரர்கள் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அருகில் உள்ள மற்ற முகாம்களில் இருந்து கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பயங்கரவாதிகள் அதிக அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ராணுவ முகாமுக்குள் நுழைந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் ராணுவ வீரர்களின் துரித நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டது.

‘சர்ஜிக்கல்’ தாக்குதல்

கடந்த ஆண்டு செப்டம்பர் 18–ந் தேதி காஷ்மீரில் உரி ராணுவ முகாமுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய பயங்கர தாக்குதலில் ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பின் நடத்திய மிகப்பெரிய தாக்குதலாகும்.

உரி ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து ‘சர்ஜிக்கல்’ தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

மூலக்கதை