இரு அணிகள் இடையே ரகசிய பேச்சு எதுவும் நடக்கவில்லை!!!

PARIS TAMIL  PARIS TAMIL
இரு அணிகள் இடையே ரகசிய பேச்சு எதுவும் நடக்கவில்லை!!!

அ.தி.மு.க. (அம்மா) அணி மாவட்ட செயலாளர்கள் ராயப்பேட்டை தலைமை கழகத்தில் 3 நாட்கள் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

அதன்படி, கடந்த 25–ந்தேதி தென் மாவட்டங்களை உள்ளடக்கிய 16 மாவட்ட செயலாளர்களும், நேற்று முன்தினம் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட 17 மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர். இந்த நிலையில் வடசென்னை, தென்சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்பட 17 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் அ.தி.மு.க. (அம்மா) அணி தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, உதயகுமார், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் கமி‌ஷன்

கூட்டத்தில் தேர்தல் கமி‌ஷனில் கொடுக்கப்பட இருக்கும் பிரமாண பத்திரத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள், அதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர்களிடையே விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும், மே 1–ந்தேதி தொழிலாளர் தினத்தையொட்டி நடத்த வேண்டிய நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

காலை 11.10 மணிக்கு தொடங்கிய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பிற்பகல் 12.10 மணிக்கு முடிவடைந்தது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

பின்பு வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– மாவட்ட செயலாளர்களிடம் எது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது?

பதில்:– தொழிலாளர் தினநாளில் எழுச்சியுடன் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்–அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

கேள்வி:– இரு அணிகள் இணைவது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடையே கருத்து கேட்கப்பட்டதா? அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள்?

பதில்:– ஏற்கனவே எங்கள் குழு கூறியது போல இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஜெயலலிதா வழியில் அரசு நடக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
ரகசிய பேச்சுவார்த்தை

கேள்வி:– ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக பேசப்படுகிறதே?

பதில்:– அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பும் அமர்ந்து வெளிப்படையாக தான் நடக்கும்.

கேள்வி:– பேச்சுவார்த்தை நடத்துவதில் இரு அணிகள் இடையே தயக்கம் ஏன்?

பதில்:– அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இதையடுத்து வெளியே வந்த உதயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘ஒற்றுமைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று கொண்டு இருக்கிறது. மூத்த அமைச்சர்கள் வழிகாட்டி கொண்டு இருக்கிறார்கள். பேச்சுவார்த்தையில் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயலலிதா ஆசியோடு எல்லாம் நன்றாக நடக்கும். இரு அணிகளின் ஒற்றுமையைத்தான் மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் வலியுறுத்துகிறார்கள்’ என்றார்.
பிரமாண பத்திரம்

அதைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கமி‌ஷனில் கொடுக்க வேண்டிய பிரமாண பத்திரத்தின் நிலவரம், எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எப்படி கொண்டாடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் இரு அணிகள் இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

மூலக்கதை