புனித தலங்களில் தடுப்பு சுவர்; உ.பி., முதல்வர் உத்தரவு

தினமலர்  தினமலர்
புனித தலங்களில் தடுப்பு சுவர்; உ.பி., முதல்வர் உத்தரவு

லக்னோ: துறவிகள் வேடத்தில் வந்து, புனித தலங்களை தகர்க்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, புனித தலங்களை சுற்றி, தடுப்பு சுவர் எழுப்ப, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

சதி திட்டம்:


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, புனித தலங்களை தகர்க்க, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யிடம் பயிற்சி பெற்ற, 25 பயங்கரவாதிகள், உ.பி.,க்குள் ஊடுருவியுள்ளனர். இவர்கள், துறவிகள் போல் வேடமணிந்து, புனித தலங்களுக்கு சென்று, அவற்றை தகர்க்க சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதற்கு, 'ஆப்பரேஷன் கிருஷ்ணா இந்தியா' என, பயங்கரவாதிகள் பெயர் வைத்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக இந்த பயங்கர வாதிகளுக்கு, ஹிந்து மத வழிபாடுகள், சடங்குகள் பற்றிய பயிற்சியையும், ஐ.எஸ்.ஐ., அளித்துள்ளதாக, உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், லக்னோவில் நடந்த அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தில், முதல்வர் ஆதித்யநாத் கூறியதாவது: புனித தலங்களை சுற்றி, தடுப்பு சுவர்கள் கட்டப்பட வேண்டும். பிரபலமான கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக, நான்கு வழிச் சாலைகள் அமைக்க வேண்டும். அயோத்தி, வாரணாசி, பிருந்தாவன், தாஜ் மஹால் உட்பட புனித மற்றும் சுற்றுலா தலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை