என்.ஜி.ஓ.,க்களை கட்டுப்படுத்த சட்டம் : அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
என்.ஜி.ஓ.,க்களை கட்டுப்படுத்த சட்டம் : அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா அமைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நடத்தி வரும், ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை, பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக நடவடிக்கை கோரி, சுப்ரீம் கோர்ட்டில், 2011ல், பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'அரசு நிதியை பெறும், என்.ஜி.ஓ.,க்கள் நிதி முறைகேடுகளில் ஈடுபடு வதை தடுக்க, மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், 'கேபார்ட்' எனப்படும், பொதுமக்கள் நடவடிக்கை மற்றும் ஊரக தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. கடந்த, 2015 செப்டம்பரில், இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், நாடு முழுவதும் உள்ள, 30 லட்சத்திற்கும் அதிகமான, என்.ஜி.ஓ.,க்களில், 10 சதவீதத்துக்கும் குறைவானவையே, தங்கள் வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்வதாக கூறியிருந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள, என்.ஜி.ஓ.,க்களின் நிதி முறைகேடுகளை விசாரிக்கும் வழக்காக, இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் விரிவுபடுத்தியது.சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, என்.ஜி.ஓ.,க்களின் நிதி விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்திய, கெபார்ட், நிதி முறைகேடு களில் ஈடுபட்டதாக, 159 என்.ஜி.ஓ.,க்களுக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யலாம் என, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தெரிவித்தது.

அப்போது, வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.எஸ்.கவுல் அடங்கிய அமர்வு கூறியதாவது: அரசு உதவி பெறும், என்.ஜி.ஓ.,க்களை கட்டுப்படுத்தும் வகையில், சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். நிதி முறைகேடுகளில் ஈடுபடும், என்.ஜி.ஓ.,க்களுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, மத்திய அரசு, எட்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மூலக்கதை