லெபனாலிருந்த இலங்கைப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
லெபனாலிருந்த இலங்கைப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்

லெபனானில் குழந்​தை பெற்ற பல இலங்கையர்கள் உட்பட பல வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், நாடு கடத்தப்பட்டுள்ளனர் மற்றும் வதிவிட விசா மறுக்கப்பட்டுள்ளனர் என, மனித உரிமைகள் தொண்டர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

லெபனான், கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையர் அடங்கலாக 21 வீட்டுப் பணியாளர்களை, அவர்களின் பிள்ளைகளுடன் நாடு கடத்தியுள்ளதாக, அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட பெண்கள், பல வேலைகொள்வோரிடம் வேலை செய்தல் போன்ற விசா சட்டங்களை மீறவில்லை என Insan எனும் லெபனானிய தொண்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“லெபனானில் வீட்டுப் பணிப்பெண்கள் குழந்தை பெறுவதைத் தடைசெய்யும் சட்டம் இல்லை” என குறித்த தொண்டர் நிறுவனத்தின் அதிகாரி றூலா ஹமட்டி தொம்ஸன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தன்னோடு குழந்தை வைத்திருக்க விரும்பிய எந்தவொரு பணிப்பெண்னையும் தாம் நாடு கடத்தவில்லையென, லெபனான் குடிவரவு நிறுவனம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்துக்குக் கூறியுள்ளது.

எனினும், இவ்வாறு நாடு கடத்தல், தாம் வேலை செய்வதைத் தடுப்பதாகவும் பிள்ளையின் படிப்பை குழப்புவதாகவும் சில பெண்கள், மனித உரிமை கண்காணிப்பகத்தில் முறையிட்டுள்ளனர்.

2016இல் தடுத்து வைக்கப்பட்டு, தனது 14 வயதுடைய மகளுடன் தான் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் தனது கணவன் ​தொடர்ந்தும் லெபனானில் வேலை செய்வதாகவும் இலங்கைப் பெண்ணொருவர் மனித உரிமை கண்காணிப்பகத்தில் முறையிட்டுள்ளார்.

லெபனானில் 200,000 வீட்டுப் பணியாளர்கள் உள்ளனரென, சர்வதேச தொழிலாளர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

லெபனானில் வேலைக்குச் சென்றவர்கள், ஒரே முதலாளியிடமே தொடர்ந்தும் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. இதனால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்து அதிகம் உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை