என்ஜிஓக்களுக்கு கிடுக்கிப்பிடி... நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ஜிஓக்களுக்கு கிடுக்கிப்பிடி... நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

டெல்லி: இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 950 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியை என்ஜிஓ நிறுவனங்கள் முறையாக செலவு செய்து,அதற்கான கணக்கை தணிக்கை செய்கிறார்களா என்று முதன்முதலாக உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளைக் கேட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோர், தங்களின் கணக்கை முறைப்படுத்திக்கொள்கின்றனர். இதைப் போலவே என்ஜிஓ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்கின்றனவா என்பதை மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பதிலளிக்க 8 வார காலம் அவகாசமும் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. மேலும் தேவையெனில் சட்டத்திருத்தம் செய்யவேண்டுமா என்பதையும் அரசுகள் கூற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 78 முக்கிய துறைகள் மூலம் என்ஜிஓக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் நிதியுதவியை முறையாகப் பயன்படுத்துகின்றனவா அல்லது என்ஜிஓ நிறுவனங்களில் முறைகேடுகள் நடக்கின்றனவா என்று தொடர் கண்காணிப்புச் செய்யவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை