அங்கிட்டு எதிர்ப்பு கோஷம்... இங்கிட்டு நண்பேன்டா வேஷம்: திமுக, பாமகவை கலாய்த்த அமித்ஷா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அங்கிட்டு எதிர்ப்பு கோஷம்... இங்கிட்டு நண்பேன்டா வேஷம்: திமுக, பாமகவை கலாய்த்த அமித்ஷா!

டெல்லி: தமிழகத்தில் பாஜகவை எதிர்க்கும் திமுகவும், பாமகவும் டெல்லிக்கு வந்தால் தங்களுடன் இணக்கமாக உள்ளதாகவும், இரு கட்சிகளும் இரட்டை வேடம் போடுவதாகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கட்சி கூட்டம் ஒன்றில் கிண்டலடித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. இவை அனைத்தையும் பாஜக உற்று நோக்கி வருகிறது.

அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னரே இரு அணிகளின் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து என்பது காணாமல் போய்விட்டது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை அபகரித்துக் கொண்ட சசிகலா கட்சியை வழிநடத்துவார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு ஓபிஎஸ்ஸை நிர்பந்தித்தது, கூவத்தூரில் எம்எல்ஏ-க்களை சிறைவைத்தது உள்ளிட்ட விஷயங்களை பாஜக கவனித்து வந்தது. இந்நிலையில் அவரே எதிர்பார்க்காத வேளையில் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதை அடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற்று எடப்பாடியின் சீட்டை பறிக்க தினகரன் கோட்டை கட்டி வந்தார். எனினும் பணப்பட்டுவாடா, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு உள்ளிட்ட விவகாரங்களால் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில் அந்த சின்னத்தை எப்படியாவது பெற்றே தீர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறால் தினகரன் குறுக்கு வழியை யோசித்தார். பின்னர் டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவை சந்தித்து அவரிடம் ரூ.60 கோடி வரை பேசிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தினகரனும் நேற்று கைது செய்யப்பட்டார்.

அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை என்னவாகும்? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் தவித்து வருகின்றனர். சசிகலா இல்லை, தினகரனும் இல்லை. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகளுக்குள் சரியான புரிதல் இல்லாமல் குழம்பி உள்ளனர். இரு அவைகளின் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்களான வைத்திலிங்கமும் கே.பி.முனுசாமியும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். சசிகலாவை முழுமையாக ஒதுக்கும் வரையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை எனக் கறாராக கூறிவிட்டார் முனுசாமி.

இந்த குழப்பமான சூழலைதான் பாஜக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிமுக ஒன்றிணையாமல் போனால் அதன் வாக்குகள் சிதறக்கூடும். அடுத்தப்படியாக உள்ள திமுக மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவற்றால் தலைத்தூக்க முடியாது. எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள பாஜக முனைப்புக் காட்டி வருகிறது. அதற்கேற்ப பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

நாம் வகுக்கும் திட்டங்களால் எளிதில் வெல்வோம் என பாஜக நம்பிக்கையோடு உள்ளது. தேர்தல் களத்தை எதிர்கொள்வது குறித்து அண்மையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய மூத்த தலைவர் ஒருவர், தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள், திராவிடர் கழகம் உள்ளிட்டவைகள் எல்லாம் நமக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. இவர்களை எல்லாம் மக்கள் ஒரு பொருட்டாகவே பார்ப்பதில்லை. இந்தக் கட்சிகளின் தலைவர்களும் லெட்டர் பேடு அமைப்பைப் போலத்தான் செயல்பட்டு வருகின்றனர். இவர்களைத் தவிர்த்து, அரசியல் கட்சி என்று பார்த்தால், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு, நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி எழுத்து என அனைத்து விஷயங்களிலும் நம்மை எதிர்ப்பதையே ராமதாஸ் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார். ஆனால், அந்தக் கட்சியோ, பாஜக ஆட்சி முடியும் வரையில் எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்கிறது.

டெல்லியில் அமைச்சர்களை சந்திக்க வரும்போதும், தமிழர் நலன் என்று சொல்லிக் கொண்டு, தனிப்பட்ட வேலைகளுக்காக வருகின்றனர். அப்போதும், ' எங்களிடம் எம்.பிக்கள் எண்ணிக்கை இல்லையென்று நினைக்க வேண்டாம். உங்களுக்கு ஆதரவு கொடுப்பதே எங்களுக்கு பெருமைதான் என வெளிப்படையாகப் பேசுகின்றனர். இங்கிருந்து தமிழ்நாடு போன பிறகு, 'மோடியின் செயல்களை எதிர்க்கிறோம்' எனப் பேட்டி அளிக்கின்றனர். இவர்களது இரட்டை நிலைப்பாட்டை நினைத்தால் சிரிப்பாக வருகிறது எனச் சொல்ல, 'பாமக போலத்தான் திமுகவும் செயல்படுகிறது என்று அமித் ஷா கலாய்த்ததாக பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

மூலக்கதை