தலைவர்கள் பிறந்தநாள் நினைவுதினம் விடுமுறை ரத்து : உ.பி., முதல்வர் யோகி அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைவர்கள் பிறந்தநாள் நினைவுதினம் விடுமுறை ரத்து : உ.பி., முதல்வர் யோகி அதிரடி

லக்னோ: முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு தினம் போன்றவற்றுக்கு விடப்படும் விடுமுறையை ரத்து செய்யும் நடவடிக்கையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்துள்ளார். மொத்தம் 15 பொது விடுமுறைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தான் பதவியேற்ற நாள்முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகள் கடன் ரத்து, அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்களுக்கு தடை, பெண்கள் பாதுகாப்புக்கென சிறப்பு படை உள்ளிட்டவற்றை நிறைவேற்றியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில், தலைவர்களின் பிறந்தநாள், நினைவுதினம் போன்றவற்றுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இதுகுறித்து, அமைச்சர் ஸ்ரீகாந்த் ஷர்மா கூறுகையில், ‘‘முக்கிய தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு தினத்துக்காக விடப்படும் 15 நாட்கள் பொதுவிடுமுறை இனிரத்து செய்யப்படும். இந்த தினத்தன்று  மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தலைவர்களின் பெருமைகள் குறித்து விளக்கப்படும்’’ என்றார்.

‘‘தலைவர்களின் பிறந்தநாளுக்கென பள்ளிகளில் விடுமுறை விடுவதை ரத்து செய்வது அவசியம்.

அதற்கு பதிலாக சுமார் 2 மணி நேரம் தலைவர்களின் செயல்பாடுகள், அவர்களின் சாதனைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். தேர்வுகால விடுமுறை, தலைவர்களுக்கான விடுமுறை போன்றவற்றால் குறைவான நாட்களே பள்ளிகள் இயங்குகின்றன.

மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சில திங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

எந்தெந்த விடுமுறைகள் ரத்தாகும் என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

.

மூலக்கதை