டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜ அமோக வெற்றி

புதுடெல்லி: டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா. ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.

வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா. ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது.   இந்நிலையில் 23ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. பிற்பகல் நிலவரப்படி பா. ஜனதா அமோக வெற்றியை நோக்கி செல்கிறது.

காலை முதல் பா. ஜனதா வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது.

இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியானது மீண்டும் திரும்பி வந்து உள்ளது என்று கூறும் அளவிற்கு வாக்குகளை பெற்று உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 184 வார்டுகளிலும், காங்கிரஸ் 40  வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 37  வார்டுகளிலும், முன்னிலை பெற்று உள்ளன. பிறர் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்று உள்ளனர்.

மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலிலும் பா. ஜனதா வெற்றியை தனதாக்கியது. அப்போது 138 வார்டுகளில் பா. ஜனதா வெற்றி பெற்று இருந்தது, காங்கிரஸ் 77 வார்டுகளை பெற்று இருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாநகராட்சிகளில் பா. ஜனதா மெஜாரிட்டியில் வெற்றி பெற்றது, தெற்கு மாநகராட்சியில் முதலிடம் பிடித்தது.

இப்போதைய தேர்தலில் மூன்று மாநகராட்சியிலும் பா. ஜனதாவே முன்னிலை பெற்று உள்ளது.

.

மூலக்கதை