வருவாய் பகிர்வு விவகாரத்தில் ஐசிசிக்கு அழுத்தம் அளிக்க பிசிசிஐ தந்திரம்? சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்பதில் குழப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வருவாய் பகிர்வு விவகாரத்தில் ஐசிசிக்கு அழுத்தம் அளிக்க பிசிசிஐ தந்திரம்? சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்பதில் குழப்பம்

புதுடெல்லி: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 1-18 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரில் பங்கேற்பதற்கான அணிகளை அறிவிப்பதற்கு ஏப்ரல் 25 (நேற்று) கடைசி நாளாகும். இதன்படி பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 7 நாடுகள் தங்கள் அணிகளை அறிவித்து விட்டன.

ஆனால் நடப்பு சாம்பியனான இந்தியா மட்டும் இன்னும் அணியை அறிவிக்கவில்லை. காலக்கெடு முடிந்தும் அணி அறிவிக்கப்படாததால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்)-ஐசிசி இடையே வருவாய் பகிர்வு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலே இந்திய அணி அறிவிக்கப்படாததற்கு காரணமாக கூறப்படுகிறது. அதாவது ஐசிசி வருவாயில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக பங்கு அளிக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டில் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த விதிமுறையில் மாற்றம் செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படும் எனக்கருதிய பிசிசிஐ, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனை சமாளிக்க ஐசிசி சேர்மன் சஷாங்க் மனோகர் சமரச திட்டம் ஒன்றை முன் வைத்தார்.

அதன்படி பிசிசிஐ-க்கு வழங்கப்படும் வருவாயுடன் கூடுதலாக ₹643 கோடியை ஐசிசி வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்த பிரச்னை நீடித்து வரும் நிலையில்தான், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

ஆனால் சூழ்நிலைகளை பொறுத்து, காலக்கெடு முடிந்தும் கூட அணிகளை அறிவிக்கலாம் என ஐசிசி சட்ட விதிகள் கூறுகின்றன. இருந்தபோதும் தற்போதுவரை காலக்கெடு நீட்டிப்பு பெற பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முயலவில்லை.

இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருப்பது ஐசிசிக்கு அழுத்தம் அளிக்கும் தந்திர நடவடிக்கைதான் எனவும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறும் தீவிரமான எண்ணத்தில் பிசிசிஐ இல்லை எனவும் கூறப்படுகிறது.  

.

மூலக்கதை