ரஜினி, கமலின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது - லொள்ளுசபா ஜீவா

தினமலர்  தினமலர்
ரஜினி, கமலின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது  லொள்ளுசபா ஜீவா

காமெடியனாக பல படங்களில் நடித்திருப்பவர் லொள்ளு சபா ஜீவா. இவர், ஆரம்பமே அட்டகாசம் என்ற படத்தில் நாயகனாக உருவெடுத்துள்ளார். இப்படம் மே மாதம் 5ந் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக, இந்த படத்தின் ஆடியோவை ரஜினிகாந்த் வெளியிட்ட நிலையில், படத்தின் டிரைலரை வருகிற 28-ம் தேதி கமல் வெளியிடுகிறார்.

இதுபற்றி ஜீவா கூறுகையில், ஆரம்பமே அட்டகாசம் படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு பிடித்தமான பக்கா கமர்சியல் படமாக இருக்கும். இந்த படத்தின் ஆடியோவை ரஜினி சார் வெளியிட்டால் நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என்பதால் அவரை தொடர்பு கொண்டு, நான் முதன்முதலாக ஹீரோவாக நடித்துள்ள ஆரம்பமே அட்டகாசம் படத்தின் ஆடியோவை உங்கள் கையினால் வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் தலைவா என்று சொன்னேன். அதைக்கேட்ட உடனே, நாளைக்கே வாங்க என்று மறுநாளே வரச்சொல்லி விட்டார். அவரிடம் இதுவரை நான் எந்த உதவியும் கேட்டதில்லை. முதன்முதலாக கேட்டது இதுதான். தாமதம் செய்யாமல் உடனே ஆடியோவை வெளியிட்டு என்னை ஆசீர்வதித்து விட்டார் ரஜினி சார். மேலும், படத்தின் தலைப்பை கேட்டதுமே என்ன லவ் பிலிமா என்று கேட்டவர், ரிலீஸ் ஆனதும் படம் பார்க்க வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 28-ந்தேதி அன்று கமல் சார் என் படத்தின் டிரைலரை வெளியிடுகிறார். ரஜினி சாரைப் போலவே கமல் சாரும் மனப்பூர்வமாக எனது படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படி இரண்டு பெரிய கலைஞர்களின் வாழ்த்து என் படத்திற்கு கிடைத்திருப்பது உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அவர்கள் மட்டுமின்றி, எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர் தம்பி ராமைய்யா உள்ளிட்ட பல திரையுலக முன்னணியினரும் எனக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

மேலும், இப்படத்திலுள்ள திருட திருட தொலைகிறாய் -என்ற பாடல் யு டியூப் பில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களை ரீச் பண்ணியிருக்கிறது. இதே வரவேற்பினை கண்டிப்பாக படத்திற்கும் ரசிகர்கள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் லொள்ளுசபா ஜீவா.

மூலக்கதை