பாகுபலி-2' டிக்கெட் விற்பனையில் நூதனமான ஆன்லைன் மோசடி..!

தினமலர்  தினமலர்
பாகுபலி2 டிக்கெட் விற்பனையில் நூதனமான ஆன்லைன் மோசடி..!

வரும் ஏப்-28ஆம் தேதி வெளியாக இருக்கும் 'பாகுபலி-2' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கிவிட்டது.. வெளியான அன்றே படத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற துடிப்புடன் ரசிகர்கள் ஆன்லைன் புக்கிங்கில் டிக்கெட்டுகளுக்காக அலைந்துகொண்டு இருக்கிறார்கள். தியேட்டர்காரர்களும் சிறப்பு காட்சி, அது இதுவென கல்லா கட்டும் வேலைகளில் தீவிரமாகி விட்டார்கள்.. இந்த பரபரப்பை பயன்படுத்தி காசுபார்க்க நினைத்த சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்றும், பக்காவாக களமிறங்கி பல லட்சங்களை வாரி சுருட்டி தியேட்டர்காரர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது..

Newtickets.in என்கிற இணையதளம் ஒன்றில் பாகுபலி டிக்கெட் ஆன்லைனில் புக்கிங் பண்ணப்படுகிறது என்பதை பார்த்த பலரும் விறுவிறுவென அதில் டிக்கெட்டுகளை புக் பண்ண ஆரம்பித்தனர். அந்த இணையதளமும் டிக்கெட் புக்கிங் பண்ணியவர்களுக்கு கன்பர்மேஷன் குறுஞ்செய்தியையும் உடனுக்குடன் அனுப்பி வைத்தது.. எப்படியாவது டிக்கெட் புக் பண்ணவேண்டும் என்கிற அவசரத்திலும், சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அனைத்து தியேட்டர்களுக்கான புக்கிங் சிஸ்டம் பக்காவாக இருந்ததாலும் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை..

ஆனால் இந்த தகவல் எப்படியோ சைபர் கிரைம் போலீஸுக்கு தெரியவர, இதுபற்றி தியேட்டர்காரர்கள் தரப்பில் விசாரித்தபோது அப்படி ஒரு இணையதளத்துடன் தாங்கள் ஒப்பந்தம் போடவே இல்லை என அதிர்ச்சியடைந்தனர்.. சைபர் க்ரைம் போலீசாரின் விசாரணையில் இந்த மோசடி கும்பல் துபாயில் இருந்து செயல்பட்டது தெரியவந்துள்ளது.. இந்த மோசடியில் ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்கள் தானாம். பணத்தை செலுத்தி ஏமாந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என குழப்பத்தில் இருக்கிறார்களாம் பாகுபலி தரப்பினர்.

மூலக்கதை