2 நிபந்தனைகளும் நிறைவேறினால் எங்கள் கருத்தை சொல்ல தயார் கே.பி.முனுசாமி பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
2 நிபந்தனைகளும் நிறைவேறினால் எங்கள் கருத்தை சொல்ல தயார் கே.பி.முனுசாமி பேட்டி

அ.தி.மு.க.வில் பிளவுபட்டு நிற்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், நேற்று காலை அவரது அணி நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., செம்மலை எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அவசர ஆலோசனை நடத்தினார்கள். சுமார் ½ மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், வெளியே வந்த நிர்வாகிகளில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சி.பி.ஐ. விசாரணை

ஜெயலலிதா மறைவுக்கு பின்பாக அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பல்வேறு கருத்து வேறுபாடு வந்தது. ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1½ கோடி தொண்டர்கள் இயற்கையாக ஜெயலலிதா மறையவில்லை, கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற ஆறாத் துயரத்தோடு இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த துயரத்தை போக்கிடவும் உண்மை நிலையை உலகத்துக்கும், நாட்டு மக்களுக்கும் கொண்டுவரவும் மத்திய அரசின் வாயிலாக சி.பி.ஐ. விசாரணை கமி‌ஷன் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுத்தார். இந்த மாநில அரசு, மத்திய அரசை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்த சொன்னார்.

அதோடு மட்டுமல்லாமல், இந்த இயக்கத்தை கபளீகரம் செய்யக்கூடிய நிலையிலே இருந்து கொண்டிருக்கின்ற, சசிகலாவையும், சசிகலா குடும்பம் முழுவதையுமே கட்சியில் இருந்தும் வெளியேற்ற வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை முன்வைத்தோம்.
குழப்பமான நிலை

இதற்கு இடையில் அந்த பகுதியில் (எடப்பாடி பழனிசாமி தரப்பினர்) இருக்கின்றவர்கள், நாங்கள் பேசுவதற்கு தயார் என்று, அவர்களாகவே ஒரு குழுவை அமைத்து, ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அறிவித்தார்கள். தன்னோடு நீண்டகாலமாக இருந்தவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்களே என்பதற்காக, அதை மதிக்க வேண்டும் என்பதற்காகவும், எங்களுடைய கோரிக்கையை முன்னிறுத்தி நாங்களும் இந்த பேச்சுவார்த்தைக்கு செல்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழுவில் 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இப்படி அறிவித்த பின்பு, முதலில் அறிவித்தவர்கள் உடனடியாக அழைப்பார்கள் என்று காத்திருந்தோம். ஆனால் அதற்கு மாறாக இந்த 2 நாட்களும் ஒரு குழப்பமான நிலையில் தான் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஒரு குழப்பமான நிலையில் சொல்கின்ற ஒரு கருத்து, சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தாக இருக்கிறது. அதில் உள்ள ஒரு தலைவர் சொல்கிறார், ‘‘நாங்கள் இன்னும் குழுவை அமைக்கவில்லை. யார் யார் உறுப்பினர்கள் என்றே தெரியவில்லை’’ என்கின்றார். ஏற்கனவே, வைத்திலிங்கம் குழு அமைக்கப்பட்டதாக அறிவித்தார். அந்தக் குழுவிலே உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் இன்னும் குழு அமைக்கப்படவில்லை என்று சொல்கிறார்.
வேறு யாரோ இயக்குகிறார்கள்

ஒரு பேச்சுவார்த்தை என்கின்ற போது, கோரிக்கை வைப்பதோடு மட்டும் நின்றுகொண்டு, பேச்சுவார்த்தையில் தான் பிற கருத்துகளை பரிமாற வேண்டும். அது தான் ஒரு தார்மீகமான நிலைப்பாடு. எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று வந்துவிட்டால், நமக்குள் இருக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி கட்டுப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினால் தான் பேசுவதற்கு உரிய சூழ்நிலை உருவாகும். அப்படி கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் ஒரு சில தலைவர்கள், அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு கருத்துகளை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி சொல்வதனால் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. இவர்கள் இவர்களுக்கு உள்ளாகவே முடிவு எடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை வேறு யாரோ இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வேறு யாரோ இயக்கிக் கொண்டிருப்பவர்கள் எப்படி முறையாக, சுயமாக கருத்துகளை பறிமாறிக்கொள்ள முடியும். அப்படி பேசினாலும்கூட வெளியில் சென்று யார் இயக்குகிறார்களோ, அவர்கள் சொல்வதை கேட்டுவந்துதான் மீண்டும் பேசக்கூடிய ஒரு சூழலில், நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்கிறோம்.
2 நிபந்தனைகள்

எனவே, நாங்கள் ஏற்கனவே கூறியதைப்போல, இந்த தர்மயுத்தத்தில் வைக்கப்பட்ட 2 கோரிக்கைகள், ஒன்று ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும். அடுத்ததாக இந்த கட்சியையே அழிக்கக்கூடிய நிலையிலே இருக்கக்கூடிய சசிகலாவையும், சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியைவிட்டு வெளியேற்ற வேண்டும். இந்த 2 கோரிக்கைகள் தான். வேறு எந்த நிபந்தனையுமே கிடையாது.

இந்த 2 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டால், நாங்கள் முழு மனதாக எங்கள் கருத்தை சொல்வதற்கு தயாராக இருக்கிறோம். ஏன் என்று சொன்னால் இன்று கட்சி பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் செய்தி ஒன்று வந்திருக்கிறது. ‘‘அம்மா வகுத்த வழியில் கழகத்தையும், ஆட்சியையும் காத்திடுவோம். சின்னம்மா, டி.டி.வி.தினகரனுக்கு தோளோடு தோள் நிற்போம்’’ என்று செய்தி வந்துள்ளது. இது எங்கிருந்தோ வருகிறது.

எனவே, எங்களது 2 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றிவிட்டால் வேறு எந்த நிபந்தனைகளையும் முன்வைக்க தயாராக இல்லை என்பதனை மட்டும் ஊடகங்கள் வாயிலாக நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.  இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

மூலக்கதை