ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பு 70 ஆக உயர்கிறது?

PARIS TAMIL  PARIS TAMIL
ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பு 70 ஆக உயர்கிறது?

ரெயில் டிக்கெட் கட்டண சலுகை பெறுவதற்கு மூத்த குடிமக்கள் வயது வரம்பை 70 ஆக உயர்த்த ரெயில்வே அமைச்சகம் பரிசீலிக்கிறது.
ரெயில்வேக்கு இழப்பு

இந்திய ரெயில்வே அமைச்சகம், பயணிகள் ரெயில்களை இயக்குவதில் ஆண்டுக்கு ரூ.34 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது. இந்த இழப்பில், ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிற 53 பிரிவிலான மானியங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சலுகை கட்டண வகையில் இழப்பு ஏற்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், ராணுவ வீரர்கள் என பல தரப்பினருக்கும் ரெயில் பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
வயது வரம்பு உயர்த்த பரிசீலனை

இந்த சலுகைகளை குறைப்பதற்கான வழிவகைகளை ரெயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது பொதுமக்களில் பெண்களுக்கு 58 வயது, ஆண்களுக்கு 60 வயது முடிந்திருந்தால் அவர்கள் மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகையை பெற முடிகிறது. ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.

இனி மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 70 ஆக்கி விடலாம் என ரெயில்வே அமைச்சகம் கருதுகிறது. இது தொடர்பாக பரிசீலித்தும் வருகிறது. அது மட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு வழங்கக்கூடிய சலுகையினால் ரெயில்வேக்கு ஏற்படுகிற நிதிச்சுமையை பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையிடம் கேட்கவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
அதிகாரி தகவல்

இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர், ‘‘ஏற்கனவே பயணிகள் ரெயில் கட்டணத்தில் மானியம் வழங்கப்படுகிறது. ராணுவத்தினருக்கான பயண கட்டண சலுகையை பாதுகாப்பு அமைச்சகமும், மூத்த குடிமக்களுக்காக கட்டண சலுகையை சமூக நீதி அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகமும், மாணவர்களுக்கான கட்டண சலுகையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஏற்க செய்ய வேண்டும். இதுபற்றி பரிசீலிக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

எனவே இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மூலக்கதை