அ.தி.மு.க.வில் 2 அணிகளை இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க.வில் 2 அணிகளை இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது

அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளையும் இணைப்பதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

அணிகளை இணைக்கும் முயற்சி

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் உதயமாகிய ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு அமைச்சர்களின் அ.தி.மு.க. அம்மா அணி ஆகிய 2 அணிகளையும் இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

2 அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஆர். வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை

பேச்சுவார்த்தையின்போது என்னென்ன நிபந்தனைகளை முன்வைக்கவேண்டும் என்பது தொடர்பாக 2 அணியினரும் தனித்தனியாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுவருகின்றனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது அணியை சேர்ந்தவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர். சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றவேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்ற பிரதான நிபந்தனைகளை பேச்சுவார்த்தையில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டர்களின் கருத்து

இதேபோல ஓ.பன்னீர்செல்வத்தை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் அல்லது கட்சியை வழிநடத்த அவரது தலைமையில் குழு அமைக்கவேண்டும் என்றும், சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கும்போது இணைந்தால் மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் என்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து சசிகலா குடும்பத்தினை வெளியேற்றவேண்டும் என்பதில் தான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் விடாப்பிடியாக உள்ளனர். இரட்டை இலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், 2 அணிகளும் இணைந்து சின்னத்தை மீட்கவேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

இன்று பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா மற்றும் அ.தி.மு.க. அம்மா ஆகிய 2 அணிகளையும் இணைப்பது தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியிலும் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள தலா 7 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

முதலில் அணிகள் இணைப்பு தொடர்பான சமரச திட்டம் ஒன்றை வகுக்க உள்ளனர். பின்னர் அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை விலக்கி வைக்கவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சுமுகமாக நிறைவடையும்

பேச்சுவார்த்தை குறித்து தங்களுடைய அணியினரிடம் கருத்து கேட்பதற்காக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் மற்றும் அ.தி.மு.க. அம்மா அணியினர் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர், அது குறித்து தங்களது அணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து கருத்து கேட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினரின் பெரும்பாலான நிபந்தனைகளை அ.தி.மு.க. அம்மா அணியினர் ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அ.தி.மு.க.வில் பிளவுப்பட்ட 2 அணிகளை இணைப்பதற்கான முயற்சி ஒரு சில நாட்களில் சுமுகமாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை நடைபெறும் சமயத்தில் 2 அணிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களால் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை