சிரியாவில் ரசாயன குண்டுவீச்சு எதிரொலி: அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிரியாவில் ரசாயன குண்டுவீச்சு எதிரொலி: அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல்

டமாஸ்கஸ்- சிரியாவில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகள் வீசப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. சிரியாவில் அதிபர் பஷார் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

அரசை எதிர்த்து பல்வேறு குழுக்கள் போராடி வருகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகளும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதனால் கடந்த 7 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ரஷ்யா உதவியுடன், தீவிரவாதிகளை ஒடுக்க சிரியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த நகரங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் அகதிகளாகி விட்டனர். போரை நிறுத்த அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த செவ்வாய் கிழமையன்று அரசு படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது வீசப்பட்ட ரசாயன குண்டுகளால் குழந்தைகள், பெண்கள் உட்பட 86 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ரசாயன குண்டுகளை தாங்கள் பயன்படுத்தவில்லை என அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், சிரியாவின் ஷாய்ரட் பகுதியில் அமெரிக்க ராணுவம் நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. 60 ஏவுகணைகளை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சிரியா ராணுவ தளம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன.

பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை